கறம்பக்குடி, பெரணமல்லூர், மானாமதுரையில் ஒரு ஓட்டு கூட வாங்காத அதிமுக, பாமக, மநீம

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 11ல் திமுக கூட்டணியும், அதிமுக, சுயேச்சைகள் தலா 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த பேரூராட்சி 7வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் பிரதிவி ராஜா வெற்றி பெற்ற நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது இப்ராஹிம்ஷா ஒரு வாக்குக்கூட பெறவில்லை. அதே வார்டில் 5க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் வசித்துவரும் இப்ராகிம்ஷாவுக்கு, 1 வாக்கு கூட பதிவாகாதது புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இங்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வேட்பாளர் தர்மராஜிம் ஒரு வாக்கு கூட பெறவில்லை.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளில் பாமக 11 வார்டுகளில் தனித்து களமிறங்கியது. இதில், பாமக வேட்பாளர்கள் 6 வார்டுகளில் 8, 3, 1, 3, 2, 3 என வாக்குகள் பெற்றனர். 6வது வார்டு பாமக வேட்பாளர் ரேவதிக்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை. 11 வார்டுகளில் போட்டியிட்ட பாமக 10 வார்டுகளில் டெபாசிட்டை இழந்தது. இதேபோல், 4 இடங்களில் தனித்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் 3 இடங்களில் தலா 3 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தனர். மேலும், தலா ஒரு இடத்தில் பாமக, பாஜ வேட்பாளர்கள் 2ம் இடத்திற்கு முன்னேறினர். அதேசமயம் அமமுக மற்றும் தேமுதிக தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி 27வது வார்டில் திமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி 257 ஓட்டுகள் பெற்று  வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பூமிநாதன் 3 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். பாஜ வேட்பாளர் முத்துக்குமாருக்கு 9 ஓட்டுகள் கிடைத்தன. தேமுதிக  வேட்பாளர் மோகன்தாசுக்கு ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இதேபோல் சிவகங்கை  நகராட்சி 1வது வார்டில் மநீம வேட்பாளர் செங்கோலுக்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. இந்த வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ்குமார் 434 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 13வது வார்டில் பாமக வேட்பாளர் ஜெயந்தி ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11 வது வார்டில் பாஜ வேட்பாளர் நரேந்திரனுக்கு ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது.

Related Stories: