×

சன்சத் ரத்னா விருதுக்கு 11 எம்பி.க்கள் தேர்வு

புதுடெல்லி: நாடாளுமன்ற வருகை பதிவு ஆய்வு குழு தரவுகளின் அடிப்படையில் 17வது  மக்களவையின் தொடக்கத்தில் இருந்து 2021ம் ஆண்டின் குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி  வரை, உறுப்பினர்களின் ஒட்டு மொத்த செயல்பாட்டின் அடிப்படையில் விருதுகளை  பிரைம் பாயின்ட் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சீனிவாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்பி என்.கே.பிரேமச்சந்திரன் மற்றும் சிவசேனா எம்பி ஸ்ரீரங் அப்பா பார்னே ஆகியோருக்கு  நீடித்த சிறந்த செயல்பாட்டிற்கான ‘சன்சத் விசிஷ்ட் ரத்னா’ விருது  வழங்கப்படும். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி  சவுகதா ராய் (மேற்கு வங்கம்), காங்கிரஸ் எம்பி குல்தீப் ராய் சர்மா (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்), பாஜ எம்பிக்கள் பித்யுத் பரன் மகதோ (ஜார்கண்ட்), ஹீனா விஜயகுமார் காவிட்  (மகாராஷ்டிரா) மற்றும் சுதிர் குப்தா (மத்திய பிரதேசம்) ஆகியோர் 17வது மக்களவையில்  சிறப்பாக செயல்பட்டதற்காக சன்சத் ரத்னா விருதுக்கு தேர்வு  செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில், பிஜு ஜனதா தளம்  எம்பி அமர் பட்நாயக், என்சிபி எம்பி பவுசியா தஹ்சீன் அகமது கான் (மகாராஷ்டிரா) ஆகியோர் 2021ம் ஆண்டில் அவையில் அதிக நேரம் சிறப்பாக செயல்பட்டதாக தேர்வு  செய்யப்பட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி  கே.கே.ராகேஷ் (கேரளா) மாநிலங்களவையில் தனது முழு காலத்திலும் சிறப்பாக  செயல்பட்டதற்காக ‘2021ல் ஓய்வு பெற்ற உறுப்பினர்கள்’ பிரிவின் கீழ்  விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் எச்.வி.ஹண்டே மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.வீரப்ப மொய்லி ஆகியோரை வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ஜூரி குழு பரிந்துரை செய்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : 11 MPs nominated for Sansad Ratna Award
× RELATED ராஜஸ்தானில் இரவில் நடந்த நீட் தேர்வு: 120 தேர்வர்கள் அதிருப்தி