மக்கள் பணிகளை கடந்த 9 மாத ஆட்சியில் சிறப்பாக செய்ததால் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு பிறகு நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு முதலில் நன்றி. இந்த கோவிட் நேரத்தில் தமிழக மக்களிடத்தில், ஒரே ஒரு வேண்டுகோள் தான் வைத்தேன். எங்கள் கூட்டணிக்கு முழு வெற்றியை தாருங்கள். அப்படி தருகிற நேரத்தில் அதை பயன்படுத்தி உங்களுக்கு பணியாற்ற, தொண்டாற்ற காத்திருக்கிறோம். அந்த முழு வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் இன்றைக்கு நம்முடைய மதசார்பற்ற கூட்டணிக்கு வழங்கி இருக்கிறார்கள்.

கடந்த 9 மாத கால திமுக ஆட்சிக்கு மக்கள் வழங்கி இருக்கின்ற நற்சான்றுதான் இந்த மாபெரும் வெற்றி. என்னை பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கிற அங்கீகாரம். திமுக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு நன்மை செய்வார்கள். கொடுத்த வாக்குறுதியை நிச்சயமாக, உறுதியாக காப்பாற்றுவாங்க என்று வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை இந்த 9 காலத்தில் நாங்கள் முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஏன், நிறைவேற்றுவோம் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் நாங்கள் காப்பாற்ற தயாராக இருக்கிறோம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு 100 சதவீதம் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றால், உள்ளாட்சியிலும் 100 சதவீதம் நாம் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை பிரசாரத்தின் மூலம் தொடர்ந்து மக்களிடம் எடுத்து சொன்னேன். ஸ்டாலின் ரொம்ப பேராசை படுகிறான் என்று நீங்கள் (மக்கள்) நினைக்க கூடாது. நான் அடைவது பேராசை அல்ல, உங்கள் உரிமைக்காத்தான். அதை இந்த தேர்தல் மூலமாக நீங்கள் செய்து காட்டியுள்ளீர்கள். இந்த வெற்றியை கண்டு, உறுதியாக சொல்கிறேன் நான் கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதிதான் எனக்கு வந்துள்ளது.

இந்த சிறப்பான வெற்றிக்கு முழு காரணம், திமுக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான். இது தேர்தல் உறவாக மட்டுமல்ல, கொள்கை அளவில் இந்த உறவு இருக்கின்ற காரணத்தினால்தான் இந்த வெற்றி நமக்கு கிடைத்திருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், அதைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் இந்த கூட்டணி அமைந்து பல வெற்றிகளை நாம் கண்டிருக்கிறோம். அதேபோல கூட்டணி கட்சி தலைவர்களுடைய ஒத்துழைப்பும், அவர்களுடைய பிரசாரமும்தான் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு தரப்பட்டிருக்கக்கூடிய அந்த ஒதுக்கீடு நடந்து முடிந்திருக்கும் இந்த உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரைக்கும் சமூகத்தில் சரிபாதி பெண்கள் இன்று பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். இது மாபெரும் சமூக நீதி புரட்சியாகும், திராவிட மாடல் புரட்சியாகும். பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதுதான் நம்முடைய கழகத்தின் லட்சியம், குறிக்கோள். அதனால் வெற்றி பெற்றிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னொன்று, என்னுடைய பணிவான வேண்டுகோள். இந்த வெற்றியை ஆடம்பரமாக நீங்கள் கொண்டாடாமல், அமைதியாக கொண்டாட வேண்டும். மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும், உண்மையாக உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும். மக்களுடைய அடிப்படை பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும். உங்கள் மீது எந்த புகாரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை நான் தொடர்ந்து நிச்சயமாக, உறுதியாக கண்காணிப்பேன். அது யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை நிச்சயமாக எடுப்பேன், அதற்கு தயங்க மாட்டேன். இவ்வளவு பெரிய வெற்றியை தந்திருக்கக்கூடிய தமிழ்நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒருமுறை திமுக சார்பில் எனது இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதிமுகவின் கோட்டை என்று கூறப்பட்ட கொங்கு மண்டலத்தை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கைப்பற்றியுள்ளது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரைக்கும் பெரிய வெற்றி பெற்றபிறகு அன்று இரவே, தலைவர் கலைஞர் நினைவிடத்துக்கு சென்றேன். நினைவிடத்தில், நாங்கள் வாழ்த்துக்களை பெற்றோம், உறுதி எடுத்துக் கொண்டோம். அப்போது, நிருபர்கள் ஒரு கேள்வியை கேட்டீர்கள். அப்போது தெளிவாக பதில் சொன்னேன். இன்றைக்கு மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து ஆட்சி பொறுப்பில் உட்கார வைத்துள்ளார்கள். நாங்கள் வர வேண்டும் என்ற உணர்வோடு எங்களுக்கு வாக்களித்த மக்கள் எங்களது பணியை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும். எங்களுக்கு வாக்களிக்க தவறியவர்கள், இவர்களுக்கு ஓட்டு போடாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும், அந்தளவுக்கு எங்களது பணி இருக்கும் என்று சொன்னேன். அதைத்தான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 9 மாத காலமாக தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் இவ்வளவு பெரிய வெற்றி. அதிமுகவின் கோட்டை என்று சொல்லிக் கொண்டிருந்த கொங்கு மண்டலத்தையே (கோவை, ஈரோடு உள்ளடக்கிய மாவட்டம்) இன்றைக்கு நாங்கள் கைப்பற்றி இருக்கிறோம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு கட்சி தலைவர்கள் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். நீங்கள் பிரசாரத்திற்கு போகவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு கூட வைத்திருந்தார்கள்...

மக்களை நேரடியாக என்னைவிட வேறு யாரும் அதிகமாக சந்தித்து இருக்க மாட்டார்கள். முதல்வர் என்ற முறையில் பிரசாரத்துக்கு சென்றால் பாதுகாப்பு என கூடுதல் செலவு ஆகும். சில பிரச்னைகள் உருவாகும். தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்க வேண்டாம் என்பதால், காணொலி காட்சி மூலம் பேசி மக்களிடம் பிரசாரம் செய்தேன். இப்போதுகூட சொல்கிறேன், வெற்றிபெற்றதற்கு பிறகு தொடர்ந்து மக்களை சந்திக்க எந்த நேரத்திலும் காத்திருக்கிறேன், தயாராக இருக்கிறேன்.

21 மாநகராட்சி மேயர்களை எப்போது தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்? சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெறும் மேயர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பீர்களா?

தேர்தல் முடிவு 100 சதவீதம் இன்னும் வரவில்லை. நாங்கள் தான் முழுமையாக வெற்றி பெற போகிறோம். இதெல்லாம் முடிந்தபிறகு எப்போது பதவிப்பிரமாணம், அந்த சூழ்நிலையை பொறுத்து யார் பங்கேற்பது என்று முடிவு செய்வோம்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை விட பாஜ சில இடங்களில் அதிக ஓட்டுக்கள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறதே?

சில இடங்களில் வேட்பாளர்களின் மனதை வைத்து ஓட்டு போடுவார்கள். கட்சியை மனதில் வைத்து ஓட்டு போடும் நடைமுறையும் உள்ளது. அதனால் இப்போது எதுவும் சொல்ல முடியாது. முடிவு முழுமையாக வந்தபிறகு அதுபற்றி பதில் பேசலாம். இவ்வாறு அவர் கூறினார். மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும்.

Related Stories: