×

நல்லாட்சிக்கு உள்ளாட்சியிலும் வரவேற்பு 21 மாநகராட்சியையும் திமுக கைப்பற்றியது: நகராட்சி, பேரூராட்சிகளில் பிரமாண்ட வெற்றி; அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, நாதக, மநீம படுதோல்வி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வரலாறு காணாத அளவில் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளை முழுவதுமாகவும், 138 நகராட்சிகளில் 132 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. 489 பேரூராட்சிகளில் 80 சதவீதம் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், மநீம கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,890 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் கடந்த சனிக்கிழமை (19ம் தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 57,746 பேர் போட்டியிட்டனர். தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை சுமார் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவானது. மிகவும் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவானது. மிகவும் குறைந்த அளவாக சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 43.59 சதவீதம் வாக்குகளே பதிவானது.

19ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு 268 வாக்கு எண்ணும் மையங்களுக்கு அன்று இரவே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. 30 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 22ம் தேதி (நேற்று) காலை 8 மணிக்கு எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் அதிக எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மொத்தமுள்ள 268 வாக்குப்பதிவு மையங்களிலும் 1 லட்சத்து 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். வாக்குகள் எண்ணும் வகையில், வாக்குப்பதிவு மையங்களில் 14 மேஜைகள் முதல் 21 மேஜைகள் போடப்பட்டிருந்தது. அனைத்து மேஜைகள் முன்பும் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. முகவர்கள் யாரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வராத வகையில் சவுக்கு கட்டை அடித்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்குப்பதிவு மையங்களுக்குள் முகவர்கள் யாரும் செல்போன் எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணும் பணிக்காக 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

அறிவித்தபடி நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கியது. சென்னையில் 15 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களே அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருந்தனர். இதைத்தொடர்ந்து சரியாக 8.30 மணிக்கு, மின்னணு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த ஸ்ட்ராங் ரூம் சீலை அகற்றி, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் அறைக்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவாகி இருந்த வாக்குகள் வார்டு வாரியாக எண்ணும் பணி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர். நகராட்சி, பேரூராட்சிகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே அதிமுக முன்னணியில் இருந்தது. போகப்போக அனைத்து நகராட்சிகளிலும் திமுக கூட்டணி கைப்பற்றியது. பேரூராட்சிகளில் சில இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். தமிழகத்தில் சென்னை, கோவை, தாம்பரம், காஞ்சிபுரம் என மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டு கவுன்சிலர் இடங்களுக்கு நடந்த தேர்தலில் 1101 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன. அதிமுக 163 இடங்களிலும், சுயேச்சை உள்ளிட்ட மற்ற கட்சிகள் 104 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக வேட்பாளர்களே அதிக வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளதால் அனைத்து மாநகராட்சியையும் திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

அதேபோன்று, மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 3,842 வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் சுமார் 2,659 இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 638 இடங்களிலும், சுயேச்சை உள்ளிட்ட பிற கட்சிகள் 545 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி, மொத்தமுள்ள 138 நகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் 132 இடங்களில் வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதிமுக 3 நகராட்சிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்துள்ளது. 3 நகராட்சிகளில் சுயேச்சைகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் ஆதரிக்கும் கட்சி நகராட்சியை கைப்பற்றும். அங்கும் திமுகவே கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அதேபோல, 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 7,604 வார்டு கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 4994 இடங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் 1206 இடங்களில் வெற்றி பெற்று 2வது இடத்தில் உள்ளனர். சுயேச்சை மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள் 1403 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பேரூராட்சியில் அதிக சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. ஆனாலும், பேரூராட்சிகளில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களே 80 சதவீதம் இடங்களில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் அதிக பேரூராட்சிகளையும் திமுகவே கைப்பற்றி உள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நகர்ப்புற தேர்தலில், மொத்தமுள்ள 21 மாநகராட்சியையும், 135 நகராட்சியையும் திமுக கைப்பற்றுகிறது. பேரூராட்சிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே பிடிக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் போன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கட்சி படுதோல்வி அடையும் நிலையில் உள்ளது. ஆனாலும், ஆறுதலாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒரு சில வார்டு கவுன்சிலர் இடங்களை மட்டுமே அதிமுக கைப்பற்றும் நிலையில் உள்ளது. இரண்டு பெரிய கட்சிகளை தவிர தனித்து போட்டியிட்ட பாமக, பாஜ, தேமுதிக, நாம் தமிழர், மநீம, அமமுக கட்சிகள் ஒரு சில வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற்று மற்ற இடங்கள் அனைத்திலும் படுதோல்வி அடைந்துள்ளது.

மொத்தத்தில், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களை வாரி சுருட்டி வெற்றி பெற்றுள்ளதால், அதிமுக தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தலில் படுதோல்வியை சந்திக்கிறது. நேற்று இரவு வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது. வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு உடனுக்குடன் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். தமிழகத்தில் நாளை (24ம் தேதி) தேர்தல் நடவடிக்கைகள் முடிவுபெறுவதாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு நிகழ்ச்சி மார்ச் 2ம் தேதி (புதன்) அன்று நடைபெறும். இதைத்தொடர்ந்து, மார்ச் 4ம் தேதி (வெள்ளி) மறைமுக தேர்தல்கள் மூலம் மாநகராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கின்றனர்.

* மாநகராட்சி-21; மொத்த இடம்-1373; 1370 முடிவு தெரிந்தவை
திமுக+
1103
அதிமுக
163
மற்றவை
82
பாஜ
22

* நகராட்சி-138; மொத்த இடம் 3842
திமுக+
2659
அதிமுக
638
மற்றவை
489
பாஜ
56

* பேரூராட்சி-489; மொத்த இடம் 7604
4995
அதிமுக
1206
மற்றவை
1173
பாஜ
230

Tags : DMK ,AIADMK ,BJP ,Temujin ,Nathaka ,Manima , DMK captures 21 corporations locally and welcomes good governance: huge success in municipalities; AIADMK, BJP, BJP, Temujin, Nathaka, Manima defeated
× RELATED ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக உள்பட மும்முனைப்போட்டி