உலக தாய்மொழி தினத்தையொட்டி தமிழ் எழுத்து வடிவில் மாணவர்கள் அமர்ந்து பெருமை சேர்த்தனர்

பெரம்பலூர் : உலக தாய்மொழி தினத்தையொட்டி மேலமாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் எழுத்து வடிவில் 247 மாணவ, மாணவிகள் அமர்ந்து தாய்மொழியை பெருமைபடுத்தினர்.

ஆண்டு தோறும் பிப்.21ம் தேதி உலக தாய்மொழி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்று உலகின் பல்வேறு நாடுகளில், அவரவர் பேசுகின்ற தாய்மொழியை போற்றுகின்ற வகையில், தாய் மொழியை பெருமைப்படுத்துகிற வகையில் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கல்தோன்றா மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடியான தமிழ் மக்கள் பேசுகின்ற தமிழ்மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாகக் கருதப்பட்டு போற்றப்படுகிறது. இதனையொட்டி நேற்று பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, மேலமாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.இதனையொட்டி மேலமாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்லமுத்து அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவியருக்கும் உலக தாய்மொழி தினம் குறித்தும், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்தும் விளக்கி பேசினார்.

பின்னர் பள்ளி வளாகத்தில் தமிழாசிரியர் கிருஷ்ணராஜ், ஓவிய ஆசிரியர் வேலுச்சாமி, உடற்கல்வி ஆசிரியர் ரவி ஆகியோரது ஏற்பாட்டில் தமிழ்மொழியிலுள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆயுத எழுத்து ஆகிய 247 எழுத்துக்களை நினைவுபடுத்தும் விதமாகவும், தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாகவும், பள்ளியில் 6,7,8,9,10 வகுப்புகளிலும் பயிலும் 247 மாணவ, மாணவியர் தமிழ் எழுத்து வடிவில் அமர்ந்து வடிவமைத்தனர்.

Related Stories: