×

நெமிலி அருகே பயங்கரம் செக்யூரிட்டியை அடித்துக்கொன்று சடலத்தை அரைகுறையாக எரித்து தண்டவாளத்தில் வீச்சு-கொலையாளிகளுக்கு போலீஸ் வலை

நெமிலி : நெமிலி அருகே செக்யூரிட்டியை அடித்துக் கொன்று சடலத்தை அரைகுறையாக எரித்து தண்டவாளத்தில் வீசிய கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த திருமால்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அரைகுறையாக எரிந்த நிலையில் கிடந்தது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றினர். மேலும், சடலம் தண்டவாளத்தில் கிடந்ததால் செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு விசாரித்தனர்.

சடலமாக கிடந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும். அவர் உடல் முழுவதும் அரைகுறையாக எரிக்கப்பட்டிருந்தது. மேலும் காயங்கள் இருந்தது. அவர் அணிந்திருந்த இடுப்பு பெல்ட் மற்றும் அரைகுறையாக எரிந்த ஆடை செக்யூரிட்டிகள் அணியும் உடைபோல் இருந்தது. எனவே அவர் ஏதாவது தனியார் தொழிற்சாலையின் செக்யூரிட்டியாக இருக்கலாம் என்றும், அப்போது மர்ம ஆசாமிகள் யாரேனும் அந்த தொழிற்சாலையில் திருட வந்தபோது ஏற்பட்ட தகராறில் இவரை அடித்துக்கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியாமல் இருக்க சடலத்தை தீ வைத்து எரித்து, தண்டவாளத்தில் வீசி சென்றிருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘சடலமாக மீட்கப்பட்டவர் உடலில் காயங்கள் இருப்பதால், அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாமல் இருக்க சடலத்தை எரித்துள்ளனர்.

ஆனால் தண்டவாளத்தில் சடலம் எரிக்கப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை. இதனால் வேறு எங்ேகயோ சடலத்தை எரித்து தூக்கி வந்து தண்டவாளத்தில் வீசியுள்ளனர். சம்பவ இடத்துக்கு அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டவுடன் குற்றவாளிகளை எளிதில் கைது செய்ய முடியும். எனவே யாராவது மாயமானதாக போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்கப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து வருகிறோம்’ என்றனர்.

Tags : Nemli , Nemili: Police beat up a security guard near Nemili and half-burned his body and threw it on the tracks.
× RELATED நெமிலி அருகே அதிமுக ஆட்சியில் ரூ.1.6...