×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: துவாக்குடி நகராட்சியில் 22 வயது இளம் பட்டதாரி வேட்பாளர் சினேகா சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி..!!

சென்னை: திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி நகராட்சி வார்டு எண் 5ல், 22வயது இளம் வேட்பாளர் சினேகா சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், திருச்சி மதுரை, கோவை உள்பட  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 21 மாநகராட்சிகளில் 1,373 வார்டுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மாநகராட்சிகளில் 4 பேர், நகராட்சிகளில் 18 பேர், பேரூராட்சிகளில் 196 பேர் என 218 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்குகளில் பெரும்பான்மையான இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி வாகை சூடி வருகிறது. அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கடும் பின்தங்கி உள்ளன. இந்நிலையில், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி வார்டு எண் 5ல், 22வயது இளம் வேட்பாளர் சினேகா 494 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். BE பட்டதாரியான இவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் கொடைக்கானல் 7வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 25வயது பிரபா ஷாமிலி ஜீவா வெற்றிபெற்றுள்ளார்.


Tags : Urban Local Government Election ,Sneha ,Tuvakudi , Tuvakkudi Municipality, Young Candidate, Independent, Win
× RELATED இடப்பிரச்னையில் பெண்ணை தாக்கியவர் கைது