×

நடிகை பலாத்கார வழக்கு: விசாரணைக்கு எதிர்ப்பு நடிகர் திலீப்புக்கு நீதிமன்றம் கண்டனம்

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் தொடர் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, நடிகர் திலீப்புக்கு கண்டனம் தெரிவித்தார். பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்து ஐந்து வருடங்கள் முடிவடைந்து விட்டன. இந்த வழக்கில் இதுவரை விசாரணை முடியவில்லை. வழக்கை ஒரு பெண் நீதிபதி தலைமையிலான தனி நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த மாதத்திற்குள் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே பலாத்கார வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உட்பட போலீசாரை கொல்ல நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டினார் என்று அவரது நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திரகுமார்  கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த வழக்கில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தொடர் விசாரணையை ரத்து செய்யக் கோரி நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் தன்னிடம் விளக்கம் கேட்ட பிறகே திலீப்பின் மனு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி பாதிக்கப்பட்ட நடிகை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த இரு மனுக்கள் மீது நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது நடிகையின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக நீதிபதி கவுசர் கூறினார். இதன்பின்னர் திலீப்பின் மனு மீது விசாரணை நடந்தது.

அப்போது நீதிபதி, ‘‘ஒரு வழக்கில் எப்போது வேண்டுமானாலும் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தலாம். அந்த விசாரணைக்கு தடைவிதிக்க கூறுவது ஏன்?’’ என்று திலீப்புக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார். விசாரணை இன்று தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கிடையே போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் நேற்று திலீப்பின் தங்கையின் கணவர் சுராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags : Dilip , Actress rape case: Court condemns actor Dilip for opposing trial
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு