×

ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் அமைக்கக்கோரி தலைமை செயலாளரிடம் கமல் மனு

சென்னை: நகரங்களில் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகள் அமைக்கக்கோரி தலைமை செயலாளரிடம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மனு அளித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தலைமை செயலாளர் இறையன்புவை சந்தித்தார். அப்போது, நகரங்களில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் அமைக்க கோரிய மனு ஒன்றை அளித்தார். இந்த சந்திப்பின் போது துணைத் தலைவர்கள் மவுரியா, தங்கவேலு மற்றும் மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ உள்ளிட்டோர் இருந்தனர்.

மனு அளித்த பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நகரங்களில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் போன்றவற்றை அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா நடைமுறைப்படுத்தியுள்ளன. அதுபோல், தமிழகத்தில் உள்ள நகரங்களில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். 50 சதவீதம் மக்கள் நகரத்தில் வாழ்கின்றனர். எனவே, நகரத்தினருக்காக அதை முன்னெடுக்க வேண்டும். தேர்தல் நேரங்களில் நகரத்துவாழ் மக்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். நகர்ப்புற வார்டுகள் அமைப்பது குறித்து 2010ல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நகர வார்டு சபைகள் அமைய வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் ஜனநாயக பங்களிப்பு வர வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறு கூறினார்.

* ‘பாஜ சாதி, மத அரசியல் நடத்துகிறது’
மக்கள் நீதி மய்யத்தின் 5வது ஆண்டு விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: ராமேஸ்வரத்தில் புறப்பட்ட இந்த கட்சியின் பயணத்தில் இருந்த சிலர் இப்போது இல்லை. அவர்கள் வியாபாரம் செய்ய வந்தார்கள். அதற்கான இடம் இதுவல்ல என்று அனுப்பி வைத்தேன். களத்தில் நின்று போராடவில்லை என்கிறார்கள். டிராபிக் போலீஸ் வேலையை ஏன் செய்ய வேண்டும். மக்களை நல்வழிப்படுத்தும் வேலையை நாங்கள் செய்கிறோம். சென்னையில் வாக்குப்பதிவு குறைவானதற்கு காரணம் மக்களின் மனச்சோர்வு. யார் வந்தாலும் இதைத்தான் செய்யப்போகிறார்கள் என்கிற சலிப்பு. என்றாலும் மக்கள் வாக்களிக்காதது தவறு. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே திட்டம் வகுத்து பயணத்தை தொடங்கி இருக்கிறோம். பாஜவினர் எப்போதும் சாதி, மத அரசியல் நடத்துகிறவர்கள். அப்படித்தான் செய்வார்கள்’ என்றார்.

Tags : Kamal ,Chief Secretary ,Area Committees and Ward Committees , Kamal petitions the Chief Secretary to set up Area Committees and Ward Committees
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...