×

மயிலாடும்பாறை பகுதியில் கொட்டை முந்திரி மரங்களை தாக்கும் கருகல் நோய்: விவசாயிகள் கவலை

வருசநாடு: மயிலாடும்பாறை பகுதியில் கொட்டை முந்திரி மரங்களை கருகல் நோய் தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உப்புத்துறை உள்ளிட்ட கிராமங்களில் கொட்டை முந்திரி விவசாயம் அதிகளவில் நடந்து வருகிறது. சில தினங்களில் கொட்டைமுந்திரி சீசன் தொடங்க உள்ள நிலையில், மரங்களுக்கு உரம், மருந்து தெளித்து விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களாக கொட்டைமுந்திரி மரங்களுக்கு கருகல் நோய் பரவி வருகிறது. இந்த நோய் பரவிய மரத்தின் இலைகள் கருகி தானாக உதிர்ந்து விடுகிறது.

இலைககளுடன் சேர்ந்து பூ, பிஞ்சுகளும் கருகி விடுவதால் கொட்டை முந்திரி உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிகளவில் நஷ்டம் அடைந்துள்ளனர்.
விவசாயிகள் பல்வேறு மருந்துகளை தெளித்தும் கருங்கல் நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நோய் வேகமாக மற்ற மரங்களுக்கும் பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட கடமலைக்குண்டு வேளாண்மைதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கொட்டைமுந்திரி மரங்களில் பரவிவரும் கருகல் நோயை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மயிலாடும்பாறை பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘நரியூத்து, உப்புத்துறை, ஆலந்தளிர், காமன்கல்லூர், போன்ற பகுதிகளில் முதல்கட்டமாக கொட்டை முந்திரி விவசாயத்தில் நோய்பரவி வருகிறது. இதனால் மிகவும் வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட கொட்டைமுந்திரி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Tags : Nutmeg disease affecting walnut trees in Mayiladuthurai: Farmers concerned
× RELATED குமரியில் தமிழர் பாரம்பரிய தற்காப்பு...