×

ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த டெல்லி வாலிபர் 21 ஆயிரம் கிமீ நடைபயணம்: திருவனந்தபுரத்திலிருந்து தொடங்கினார்

நெல்லை: இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த திருவனந்தபுரத்திலிருந்து இந்தியா முழுவதும் 21 ஆயிரம் கி.மீ. நடைபயணம் செல்லும் வாலிபர் நேற்று நெல்லை வந்தார். டெல்லியைச் சேர்ந்த சமூக சேவகர் கிரண் வர்மா (37). இவரது மனைவி ஜெயதிவர்மா (32) டெல்லியில் தனியார் நிறுவனத்தில் கெமிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிகளுக்கு இனேஸ் (4) என்ற மகன் உள்ளான். 10ம் வகுப்பு வரை படித்துள்ள கிரண் வர்மா ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த 2021 டிச.28ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

10 கிலோ வரை எடையுள்ள தனக்கு தேவையான பொருட்களை பையில் வைத்து முதுகில் சுமந்தபடியே நடந்து செல்லும் இவர், அதற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட காலணியை அணிந்துள்ளார். அதிகாலை 5 மணி முதல் 11 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு குறிப்பிட்ட நேரம் வரை நடந்து செல்கிறார். இரவு ஓய்வெடுத்து விட்டு மறுநாள் நடைபயணத்தை தொடர்கிறார். கிரண்வர்மா திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, மாஹே, கண்ணூர், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி, சிக்மகளூரு, பெங்களூர், ராமநகரா, மாண்டியா, மைசூர், நீலகிரி, கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகர் ஆகிய ஊர்களில் சுமார் 1700 கிமீ கடந்து நேற்று நெல்லை வண்ணார்பேட்டை வந்தார்.

அவரிடம் கேட்டபோது,‘‘இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு ரத்தம் கிடைக்காத நிலை இருப்பதால், 30 லட்சத்துக்கும் அதிகமானோர் ரத்தம் கிடைக்காமல் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இந்தியாவில் 50 லட்சம் இளைஞர்கள் ரத்ததானம் செய்ய முன்வந்தால் இந்த இறப்புகளை தடுக்க முடியும். எனவே இளைஞர்கள், பொதுமக்களிடம் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 21 ஆயிரம் கி.மீ. நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்து, 2021 டிச.28ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்கினேன். இந்த நடைபயணம், உலகில் தனிநபரின் மிக நீண்ட ரத்த விழிப்புணர்வு பிரசாரமாக இருக்கும்.

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பரவலால் தன்னார்வ ரத்ததானம் மிகவும் குறைந்துள்ளது. எனவே ரத்த வங்கிகள், மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்காக, பொதுமக்களிடம் ரத்த தானத்தை ஊக்கப்படுத்தவே இந்த நடைபயணம். 2025 டிச.31க்கு பிறகு இந்தியாவில் ரத்தத்திற்காக யாரும் காத்திருந்து இறக்கக்கூடாது என்பதற்காக, ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதே எனது முக்கிய நோக்கம். தொடர்ந்து நெல்லையிலிருந்து நாகர்கோவில், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்கள் வழியாக நடைபயணத்தை தொடர இருக்கிறேன்’’ என்றார்.

Tags : Delhi Walker ,Thiruvananthapuram , Delhi Walker 21 thousand km trek to raise awareness about blood donation: Started from Thiruvananthapuram
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!