×

சரியான முகவரி குறிப்பிடப்படவில்லை எனில், மனுக்கள் திருப்பி அனுப்பப்படும்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம்

சென்னை: சரியான முகவரி குறிப்பிடப்படவில்லை எனில், மனுக்கள் திருப்பி அனுப்பப்படும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் ஏற்படுத்தப்பட்டு தற்காலிகமாக எண். 31, செனடாப் 2 ஆவது சந்து, தேனாம்பேட்டை, சென்னை-18 என்ற முகவரியிலுள்ள தாட்கோ அலுவலகத்தின் ஒரு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக செய்திக் குறிப்பு  ஏற்கனவே நாளேடுகளில் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. தேசிய பட்டியல் சமூகத்தினர் ஆணையம் (National Commission for Scheduled Castes) தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையம் (National Commission for Scheduled Tribes) ஆகியவை நீண்ட நாட்கள் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகின்றன.

தேசிய பட்டியல் சமூகத்தினர் ஆணையத்தின் மாநில அலுவலகம் சென்னை, சாஸ்திரிபவனில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த ஆணையங்களுக்கிடையிலான வேறுபாடு தெரியாமல், மாநில ஆணையத்தின் முகவரியாக  சாஸ்திரிபவனை குறிப்பிட்டும், தேசிய ஆணையத்தின் முகவரியாக தமிழ்நாடு ஆணையத்தின் முகவரியைக் குறிப்பிட்டும், மனுக்கள் அனுப்புகிறார்கள். அந்த மனுக்களை பரிசீலனை செய்வதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆகவே தமிழ் நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில  ஆணையத்திற்கு (TamilNadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes) மனு கொடுக்க விரும்புவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தங்கள் மனுக்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாநில ஆணையத்தில் மனு கொடுக்க விரும்புவர்கள் அதே சமயம் தேசிய பட்டியல் இனத்தோர் ஆணையத்திற்கோ அல்லது தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திற்கோ அதே போன்றதொரு மனு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சொல்லப்போனால், ஒரே மனுவை தேசிய பட்டியல்  இனத்தோர் ஆணையம் அல்லது தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் ஆகிய இரண்டுக்கும் முகவரியிட்டு அனுப்பி வைக்கிறார்கள். இந்த வகையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையச் சட்டம் 17/2021, பிரிவு 8-ல்  உள்ள வரம்புரை (Proviso)-ல் அரசியலமைப்பின் 338-ஆம் பிரிவின்படி நிறுவப்பட்ட ஆதிதிராவிடருக்கான தேசிய ஆணையம் அல்லது அரசியலமைப்பின் 338Mஆம்  பிரிவின்படி நிறுவப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஒரு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டால், அந்த விவகாரத்தைப் பொறுத்து மாநில ஆணையத்திற்கு அதிகாரம் அற்றுப் போகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு ஆணையத்திற்கும் ஒரு சேர மனு அனுப்புவது மாநில ஆணையம் தன்னுடைய பணியைச் செய்வதற்கு நடைமுறைச் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதை உணர்ந்து பொது மக்கள் செயல்படுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சரியான முகவரி குறிப்பிடப்படவில்லை எனில், அல்லது ஆணையத்தின் பெயர் சரியாக குறிப்பிடப்படவில்லை என்றால், அந்த தபால் பரிசீலனை செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படும் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. மனுக்களையோ / புகார்களையோ  மாநில ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவர்,  மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் பெயர் குறிப்பிட்டு அனுப்பலாகாது. ஆணையத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டு ஆணையத்தின் முகவரிக்கு அவற்றை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


Tags : Tamil Nadu Adidravidar and Aboriginal State Commission , If the correct address is not mentioned, the petitions will be sent back: Tamil Nadu Adithravidar and Tribal State Commission
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை