×

வாக்களிப்பதை செல்போன் மூலம் படம்பிடித்த பாஜக மேயர் ‘ரிவால்வர் தீதி’ மீது வழக்கு: தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை

கான்பூர்: உத்தரபிரதேச தேர்தலில் வாக்களிக்கும் போது செல்ஃபி எடுத்த கான்பூர் மாநகராட்சி பாஜக மேயர் பிரமிளா பாண்டே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 59 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக கான்பூர் மாநகராட்சி மேயர் பிரமிளா பாண்டே (65), அங்குள்ள ஹட்சன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு பிற்பகல் சென்றார்.

அப்போது தான் வாக்களிப்பதை தனது செல்போன் மூலம் படம்பிடித்த அவர், அதுதொடர்பான வீடியோவையும், புகைப்படத்தையும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்தார். இந்த காட்சி பகிரப்பட்ட சில மணிநேரங்களில், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. வாக்களிப்பது தனி நபர் ரகசியம் என அரசியலமைப்புச் சட்டம் கூறும் போது, அதனை மீறும் வகையில் பிரமிளா பாண்டே செயல்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் பெரிதானதை அடுத்து, கான்பூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பிரமிளா பாண்டே மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் பிரமிளா பாண்டே, ஏற்கனவே இவரை மக்கள் ‘ரிவால்வர் தீதி (அக்கா)’ என்று அழைத்து வருகின்றனர். காரணம், இவர் மேயர் ஆவதற்கு முன்பு கவுன்சிலராக இருந்தார். அந்த நேரத்தில், அவர் தனது உரிமம் பெற்ற ரிவால்வருடன் ஜீப்பில் வலம் வருவார். அதனால் அவரை  ‘ரிவால்வர் தீதி’ என்று அழைப்பார்கள். பாஜகவின் மகிளா மோர்ச்சா அமைப்பின் பொதுச் செயலாளராகவும் இருந்த இவர், தனது கையால் பாம்புக்கு உணவு கொடுத்த வீடியோ வைரலானது.

மாநகராட்சி பூங்காவில் சூதாடுதல், மது அருந்துவோரை பிடிப்பதற்காக துப்பாக்கி சுடும் வீரரை அழைத்துச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ெவற்றிப் பெற்று ஆட்சி பிடித்த போது, பறை அடித்து கொண்டாடினார். பாஜக சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் ஸ்கூட்டியில் கொடிகளை கட்டிக் கொண்டு வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : BJP ,Revolver Didi , Case against BJP mayor 'Revolver Didi' who filmed voting through cell phone: Election officials take action
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...