×

ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீனுக்கு எதிர்ப்பு: பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனு

உத்திரப்பிரதேசம்: லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனுக்கு எதிராக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த ஆண்டு அக்டோபர் 3 தேதி நடந்த பேரணியில் காரை செலுத்தி 4 விவசாயிகளை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு விவசாய அமைப்புகள், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த மனுவில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உத்திரப்பிரதேச மாநில அரசு தவறி விட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் நீதிக்காக உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் நீதியின் பிடியில் இருந்து தப்பித்து சாட்சிகளை கலைக்கவும் வாய்ப்பு உள்ளதால் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அந்தமனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.      


Tags : Ashish Misra ,Supreme Court , Ashish Misra, Bail, Protest, Farmers, Family, Supreme Court, Petition
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...