லாக்டவுனில் அதிகரிக்கும் உளவியல் வன்முறை

நன்றி குங்குமம் தோழி

வன்கொடுமையில் பாதிக்கப்படுபவர்களுக்குச் சட்ட ரீதியாக உதவிகள் கிடைக்கும். ஆனால், சில குடும்பங்களில் நேரடியாக வன்கொடுமை நிகழாவிட்டாலும், சில உளவியல் ரீதியான கொடுமைகளும் பிரச்சனைகளும்  இருக்கும். இவற்றை சட்ட ரீதியாக அணுக இயலாது. இப்பிரச்சனைகள் சிறிய சண்டைகளாக ஆரம்பித்து, கவனம் செலுத்தாவிட்டால், திடீர் பூகம்பமாக வெடித்து நம்மை மிரட்டும். இன்று ஊரடங்கு காலத்தில், பலரும் இந்த நேரத்தை குடும்பத்தினருடன், அவர்களை புரிந்துகொண்டு பயனுள்ளதாக செலவிடுகின்றனர். ஆனால் மறுபுறம் சிலர் ஒரே வீட்டில் தப்பிக்க வழியில்லாமல் சிறை வாசிகளைப்போல நாட்களைக் கடக்கின்றனர். இதற்கு குடும்பத்தினரின் விமர்சனங்கள்,  ஆலோசனை என்ற பெயரில் அவர்கள் தரும் அழுத்தங்கள், அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் ஒருவரை இயக்க நினைப்பது போன்ற பல காரணங்கள் அடங்கும். இவையெல்லாம் அன்பு, அக்கறை என்ற போர்வையில் பல சமயம் அறியாமலேயே நடத்தப்படும் உளவியல் வன்முறைகள்.  

இந்த உளவியல் சவால்களை எதிர்கொள்ள நமக்கு நிச்சயம் ஒரு ஆலோசகரின் உதவியும் கண்காணிப்பும் தேவை. அரசாங்கம் உடல்நலச் சிக்கல்களை மட்டுமே அத்தியாவசியமாக கருதி, உளவியல் சிக்கல்களுக்கு அதே முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறது. முழு ஊரடங்கில், வன்கொடுமைக்கு நிகரான பல உளவியல் வன்முறைகளும் குடும்பங்களில் நடந்து வருகின்றன. குடும்பத்தில் ஒருவர், தெரிந்தோ தெரியாமலோ அவர் குடும்ப உறுப்பினரையே மன உளைச்சலுக்கு ஆளாக்கி உளவியல் ரீதியான வன்முறையில் ஈடுபடுகிறார். இப்பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு பல உளவியல் ஆலோசகர்களும், மருத்துவர்களும், இந்த ஊரடங்கு காலத்திலும் இணையம் மூலமாக வீடியோ அழைப்புகளில் சிகிச்சைகள் வழங்கி வருகின்றனர். அதில் முக்கியமாக, உளவியல் நிபுணர் சரஸ்வதி பாஸ்கர், ஊரடங்கின் தொடக்கத்திலிருந்தே தன்னிடம் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவாக இருக்கிறார்.

அவர் இதற்கான காரணத்தை விளக்குகிறார், “ஆங்கிலத்தில் ‘Familiarity breeds contempt’ என்று ஒரு கருத்து இருக்கிறது. ஒருவருடன் தினம் பழகி, அவர்களின் ஒவ்வொரு செயலையும் வழக்கங்களையும் நேரடியாகப் பார்க்கும் போது, அதில் பல வேற்றுமைகளும் சலிப்பும் உண்டாகி அவரையே வெறுக்கும் அளவிற்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. வெளியே அலுவலகத்திற்குச் சென்று வரும் போது, ஒருவரின் செயல்களை பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டோம். அதுவே ஒரே வீட்டில் நான்கு சுவர்களுக்குள் மட்டும் இருக்கும் போது, ஒருவரை கூர்மையாகக் கவனிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் அவரிடம் இருக்கும் அற்பமான குறைகளும் கூட பெரிதாகத் தெரிகின்றன.

இந்த குவாரன்டைன் நேரத்தில், பல குடும்பங்களிலும் இப்பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடும்பத்தினரின் பாகுபாடுகள், கட்டுப்பாடுகளை இதுவரை தெரிந்தும் தெரியாமல் பொறுத்துப் போன பலரையும் இந்த ஊரடங்கு, பொறுமை இழக்கச் செய்திருக்கிறது. மேலும், வீட்டு வேலைகளுடன், அலுவலக வேலையும் சேர்ந்து சுமையை அதிகரித்திருப்பதால் மக்கள் எப்போதும் எரிச்சலுடன் இருக்கின்றனர். இந்த நேரத்தில் சச்சரவுகள் உருவாக இடம் தராமல், அவற்றைவிட்டு விலகி இருப்பதே சிறந்தது. இப்பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சமாளிக்க உளவியல் ஆலோசனைகள் பெரும் உதவியாய் இருக்கும்” என்கிறார். மேலும் இந்த லாக்டவுனில் உளவியல் ஆரோக்கியத்திற்காக, ‘‘துயரமான நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவுகொள்ளாமல், அதிலிருந்து மீண்டுவரும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். மனதில் தேங்கிக்கிடக்கும் வேண்டாத குப்பைகளை நீக்கிவிட்டு மகிழ்ச்சியான  நினைவுகளை மனதில் சேகரியுங்கள்.  

உளவியல் பிரச்சனைகளுக்கான எதிர்ப்பு சத்து தன்னம்பிக்கையும் தன்நிறைவும்தான். இதற்கு முன் சந்தித்த கசப்பான புண்படுத்தும் சம்பவத்தை எப்படிக் கடந்து வந்தோம் என்பதை நினைவுகூர்ந்து, அப்போது வெளிப்படுத்திய துணிச்சலை இப்போதும் வெளிக்கொணர்ந்து சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டும்” என்கிறார்.   இந்த நிச்சயமற்ற நிலை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற பதில் இல்லாததே  பலரின் பதற்றத்திற்கும் காரணமாய் இருக்கிறது. நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஒன்றை நினைத்துக் கவலைப்படாமல், நம் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தினாலே தீர்வு கிடைத்துவிடும். இன்று பலரும் உளவியல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதற்கான சிகிச்சைகளை எடுக்கவும் முன்வருகின்றனர்.

சினிமா, இலக்கியம் போன்ற துறைகளில் தொடங்கி, குடும்பங்களிலும் கூட மனநலம் சார்ந்த உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு விவாதமாக்கப்படுகிறது. எப்படிக் காய்ச்சல், இருமலுக்கு மருத்துவரை அணுகி குணமடைகிறோமோ, அதே போல இனி மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உளவியல் நிபுணரை மக்கள் வெளிப்படையாக அணுக ஆரம்பித்தால் பிரச்சனைகளை எளிதாக்கி மகிழ்ச்சியுடன் வாழலாம்’’ என்று ஆலோசனை வழங்கினார் மனநல நிபுணர் சரஸ்வதி பாஸ்கர்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

>