நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து அணியை மீட்ட இளம்வீரர்களை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது: ரோகித்சர்மா பேட்டி

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் ஒரு பவுண்டரி, 7 சிக்சருடன் 65 ரன் எடுத்தார். வெங்கடேஷ் அய்யர் நாட்அவுட்டாக 35( 19 பந்து, 4 பவுண்டரி,2 சிக்சர்) இஷான் கிஷன் 34 (3 1பந்து) ரன் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுத்தது. இதனால் 17 ரன் வித்தியாசத்தில் இந்திய அபார வெற்றி பெற்று 3-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது. வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் நிகோலஸ்பூரன்  61, ரொமாரியோ ஷெப்பர்ட் 29, ரோவ்மேன் பவல் 25 ரன் எடுத்தனர். இந்திய பந்து வீச்சில் ஹர்சல் பட்டேல் 3, தீபக் சாகர், வெங்கடேஷ் அய்யர், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். நேற்று 65 ரன் உள்பட இந்த தொடரில் 107 ரன் எடுத்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.

 வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா அளித்தபேட்டி: தொடரை வென்றது மகிழ்ச்சி. நாம் விரும்பிய அனைத்தும் கிடைத்தன. ஒரு அணியாக நாங்கள் மிகவும் இளமையாக இருக்கிறோம். அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி பேட்டிங் செய்வது என்பதை வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். நெருக்கடி சூழ்நிலைகளில் இருந்து அணியை மீட்கும் இளம் வீரர்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து நாங்கள் விரும்பிய அனைத்தும் கிடைத்தது.

குழுவாக முன்னோக்கி நகர்வது நல்ல அறிகுறி மற்றும் பெருமைப்பட வேண்டிய ஒன்று. வேகப்பந்து வீச்சாளர்கள் ஒருநாள் போட்டியை போன்று சிறப்பாக பந்து வீசினர். நாங்கள் உலகக் கோப்பையை மனதில் வைத்துள்ளோம், தனி நபர்களுக்கு ஆட்ட நேரத்தை வழங்க முயற்சிக்கிறோம். அடுத்து இலங்கை தொடர் ஒரு வித்தியாசமான சவாலாக இருக்கும். நான் எதிரணியைப் பார்க்கும் நபர் அல்ல, ஒரு அணியாக நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க விரும்புகிறேன், என்றார்.

வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், இந்திய அணி பேட்டிங் செய்தபோது 15 ஓவர் வரை சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் கடைசி 5 ஓவரில் 85 ரன் கொடுத்துவிட்டோம். பேட்டிங்கில் நன்றாக தொடங்கியபோதிலும் இதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை. பூரன் தனது நிலைத்தன்மையை காட்டினார். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் கடினமானது, என்றார்.

6 ஆண்டுக்கு பிறகு நம்பர் 1

வெஸ்ட்இண்டீசுக்குஎதிரான டி.20 தொடரை 3-0 என கைப்பற்றிய இந்திய அணி ஐசிசி டி.20தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 269 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்தை இந்தியா பின்னுக்கு தள்ளி 6 ஆண்டுக்கு பின் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. ஏற்கனவே 2016 பிப்ரவரி 12 முதல் மே 3 வரை டோனி தலைமையில் இந்திய அணி முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடருக்கு சாகர் சந்தேகம்?

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீபக் சாகர் நேற்று 1.5ஓவர் பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்திய நிலையில், தனது 2வது ஓவரின் கடைசி பந்தை வீசுவதற்குள் வலது கால் தசை பிடிப்பு காரணமாக பாதியில் வெளியேறினார். அவரின் காயத்தின் தன்மை தெரியவில்லை. காயம் அதிகமாக இருந்தால் குணமடைய 6 வாரங்கள் ஆகும். இதனால் அவர் இலங்கைக்கு எதிராக வரும் 24ம் தேதி தொடங்கும் டி.20 தொடரில் பங்கேற்பது சிக்கல் தான்.

கடைசி வரை களத்தில் நிற்கவேண்டிய நெருக்கடி

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் சூர்யகுமார்யாதவ் கூறியதாவது: முதல் ஆட்டத்தில் நான் செய்ததை மீண்டும் செய்ய விரும்பினேன். ரோகித் அவுட் ஆன பிறகு கடைசிவரை களத்தில் நின்று அணி பாதுகாக்கக்கூடிய ஸ்கோரை எட்டவேண்டிய நெருக்கடி இருந்தது. டீம் மீட்டிங்கில் நாங்கள் பெரும் அழுத்தத்தில் எப்படி நடந்து கொள்ளப் போகிறோம் என்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம், அது நன்றாக உதவியது. நான் விஷயங்களை எளிமையாக வைக்க முயற்சிக்கிறேன். இதுபோன்ற சூழ்நிலையில் எப்போதும் கடைசி வரைபேட்டிங் செய்ய விரும்புகிறேன், என்றார்.

Related Stories: