×

நீலகிரியில் நாளை வாக்கு எண்ணிக்கை 13 வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு  தேர்தல் முடிந்த நிலையில், 13 மையங்களில் நாளை 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை  நடைபெற உள்ளது.
நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் உள்ள 108 வார்டு உறுப்பினர்கள், 11  பேரூராட்சிகளில் உள்ள 186 வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 294  உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில்  அதிகரட்டி, கேத்தி மற்றும் பிக்கட்டி ஆகிய 3 பேரூராட்சிகளில் தலா  ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனால், பேரூராட்சிகளில்  183 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. நகராட்சி, பேரூராட்சிகளில் 291  வார்டுகளுக்கு 1253 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு  நடைபெற்ற நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 62.68 சதவீதம் வாக்குகள் பதிவானது.  தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 13  இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ஸ்ட்ராங்  ரூம்களில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளன.

இங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சிசிடிவி, கண்காணிப்பு கேமராக்கள்  பொருத்தப்பட்டு வெப் ஸ்ட்ரீமிங் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 22ம் தேதி காலை 8 மணி  முதல் எண்ணப்பட்டு உடனுக்குடன் முன்னிலை விவரம் மற்றும் முடிவுகள்  அறிவிக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 15 நகர்ப்புற உள்ளாட்சி  அமைப்புகளில் பதிவான வாக்குகளை எண்ண 13 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு மேசையிலும்  கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஊட்டி நகராட்சிக்கு வாக்கு  எண்ணும் மையமான ஊட்டி ரெக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 9 மேசைகள் அமைக்கப்பட்டு, 9  சுற்றுகளாகவும், குன்னூர் நகராட்சிக்கு புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி  வாக்கு எண்ணும் மையத்தில் 10 மேசைகள் அமைக்கப்பட்டு 4 சுற்றுகளாகவும்,  நெல்லியாளம் நகராட்சிக்கு பந்தலூர் பஜார் புனித பிரான்சிஸ் சேவியர்  ஆரம்பப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் 8 மேசைகள் அமைக்கப்பட்டு 5  சுற்றுகளாகவும், கூடலூர் நகராட்சிக்கு கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு  எண்ணும் மையத்தில் 4 மேசைகள் அமைக்கப்பட்டு 11 சுற்றுகளாகவும் வாக்குகள்  எண்ணப்பட உள்ளது.

பேரூராட்சிகள்: அதிகரட்டி பேரூராட்சிக்கு அதிகரட்டி  அரசு மேல்நிலை பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் 3 மேசைகள் அமைக்கப்பட்டு 6  சுற்றுகளாகவும், பிக்கட்டி மற்றும் கீழ்குந்தா பேரூராட்சிகளுக்கு மஞ்சூர்  அரசு மேல்நிலை பள்ளி வாக்கு எண்ணும் மையமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கு  இரு பேரூராட்சிகளுக்கும் தலா 2 மேசைகள் அமைக்கப்பட்டு 8 சுற்றுகளாக  வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

தேவர்சோலை பேரூராட்சிக்கு தேவர்சோலை அரசு  மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் 4 மேசைகள் அமைக்கப்பட்டு 6  சுற்றுகளாகவும், உலிக்கல் பேரூராட்சிக்கு சேலாஸ் சிறுமலர் ஆரம்ப பள்ளியில் 2  மேசைகள் அமைக்கப்பட்டு 9 சுற்றுகளாகவும், ஜெகதளா பேரூராட்சிக்கு அருங்காடு  பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் 2 மேசைகள் அமைக்கப்பட்டு 8  சுற்றுகளாகவும், கேத்தி பேரூராட்சிக்கு சாந்தூர் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் 4 மேசைகள் அமைக்கப்பட்டு 5 சுற்றுகளாகவும், கோத்தகிரி  பேரூராட்சிக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையத்தில் 4 மேசைகள் 7  சுற்றுகளாகவும், நடுவட்டம் பேரூராட்சிக்கு நடுவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 மேசைகள் அமைக்கப்பட்டு 8 சுற்றுகளாகவும், ஒவேலி பேரூராட்சிக்கு  கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மேசைகள் அமைக்கப்பட்டு 6  சுற்றுகளாகவும், சோலூர் பேரூராட்சிக்கு நாகர்தனை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2  மேசைகள் அமைக்கப்பட்டு 8 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளது.நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

நீலகிரி  மாவட்டத்தில் 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று  முன்தினம் நடந்தது. இங்கு பயன்படுத்தப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்கள், 13  இடங்களில் உள்ள 15 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 300  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 3 அடுக்கு போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags : Nilagiri , Ooty: With the completion of elections for urban local bodies in the Nilgiris district, the counting of votes is scheduled to take place tomorrow (22nd) in 13 centers.
× RELATED நீலகிரியில் கனமழையால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து