×

ஆந்திர மாநில அரசு பாதுகாப்பான கட்டிடம் அமைத்தால் ரிசர்வ் வங்கியில் உள்ள ₹50 ஆயிரம் கோடி மதிப்பு நிஜாமின் நகைகள் ஐதராபாத் கொண்டுவரப்படும்

* பொதுமக்கள் பார்வைக்கு    வைக்க முடிவு

*  மத்திய இணை அமைச்சர்  கிஷண் தகவல்

திருமலை : ஆந்திர மாநில அரசு பாதுகாப்பான கட்டிடம் அமைத்தால் ரிசர்வ் வங்கியில் உள்ள ₹50 ஆயிரம் கோடி மதிப்பிலான நிஜாமின் நகைகள் ஐதராபாத் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் கிஷண் தெரிவித்துள்ளார்.பிரிட்டிஷ் படைகள் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவோடு இந்திய நாட்டை விட்டு முழுமையாக வெளியேறியது. அந்த நாள் ஆண்டுதோறும் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரமைடந்தபோது மன்னராட்சிக்குட்பட்ட 567 மாகாணங்களாகப் பிரிந்து கிடந்தது. முகமது அலி ஜின்னாவின் முஸ்லீம் லீக் கோரிக்கையால் பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்து சென்ற பிறகு, இந்தியாவில் 522 மாகாணங்கள் இருந்தன.

இவற்றை ஒருங்கிணைக்கும் பொறுப்பு நாட்டின் முதல் துணை பிரதமரான சர்தார் வல்லபாய் படேலுக்கு வழங்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு தனித்தனி மாகாணங்களாக இருந்தவற்றுக்கு இந்தியாவுடன் இணைவது, பாகிஸ்தானுடன் இணைந்து கொள்வது அல்லது தனி மாகாணமாகவே செயல்படுவது என மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பல்வேறு மாகாணங்கள் படேலின் உறுதியளிப்பை ஏற்று இந்தியாவுடன் இணைய முற்பட்டபோது, திருவாங்கூர் சமஸ்தானம், ஜோத்பூர், போபால், ஐதராபாத் மற்றும் ஜூனாகத் ஆகியவை இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டன. பேச்சுவார்த்தைகள், ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் மூலமாக பின்னர் இவை இந்தியாவோடு இணைக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரமடைந்தபோது ஐதராபாத் மாகாணம் நிஜாம் மீர் உஸ்மான் அலிகான் ஆளுகையின் கீழ் இருந்தது. சுதந்திரத்துக்கு முன்னரே தனியாக பணம், தொலைத்தொடர்பு, ரயில் போக்குவரத்து, தபால் துறை, ரேடியோ ஒலிபரப்பு என தனி அரசாங்கத்தையே நிஜாம் மீர் உஸ்மான் அலிகான் நிர்மானித்திருந்தார்.ஐதராபாத் ராணுவம், 1948ம் ஆண்டு செப்டம்பர் 18ல் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தது.

பின்னர் ஐதராபாத்தை கைப்பற்றிய பிறகு நிஜாம் மீர் உஸ்மான் அலிகான் உடன் பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு அம்மாகாணத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. நிஜாம் மீர் உஸ்மான் அலிகான் 136வது பிறந்த நாளை ஏப்ரல் 6 கொண்டாடுவதற்காகத் தயாராகி வரும் நிலையில், நிஜாம் மீர் உஸ்மான் அலிகானுக்கு சொந்தமான 150 நகைகள் தற்போது டெல்லி ரிசர்வ் வங்கி கஜானாவில் முடங்கிக்கிடக்கிறது. நிஜாம் பயன்படுத்திய சுமார் 150 நகைகளின் மதிப்பு ₹50,000 கோடியாகும். இதனைத் ஐதராபாத்துக்கு கொண்டு வர வேண்டும் என இவரது வம்சாவளியினர் கடந்த 25 ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில அரசிடம் போராடி வருகின்றனர்.

1886, ஏப்ரல் 6ம் தேதி பிறந்த நிஜாம் மீர் உஸ்மான் அலிகான், 19111948 வரையிலான காலத்தில் ஐதராபாத் நகரத்தை ஆண்ட கடைசி நிஜாம். இவருக்குப் பல உயரிய பட்டங்களும், பதவிகளும் அளிக்கப்பட்டது. மார்டன் ஐதராபாத்தின் ஆர்கிடெக்ட் ஆக அழைக்கப்படும் இவர், ஐதராபாத் நகரத்திற்கு உயர் நீதிமன்றம், ஓஸ்மானியா பல்கலைக்கழகம், ஓஸ்மானியா பொது மருத்துவமனை, மோசாம் ஜஹி மார்கெட், டவுன் ஹால், ஐதராபாத் மியூசியம் ஆகியவற்றை அளித்தார். ஐதராபாத் நகரத்தின் வளர்ச்சிக்காக பேகும்பெட் விமான நிலையத்தை அமைத்தார்.
1937ம் ஆண்டுப் பிப்ரவரி 22ம் தேதி வெளியான டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் நிஜாம் மீர் உஸ்மான் அலிகான் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டத்துடன் இடம்பெற்றார். அந்தக் காலத்திலேயே இவரின் சொத்துமதிப்பு 2 பில்லியன் டாலர் என்ற அளவில் மதிப்பிடப்பட்டது. இன்று இது 30 பில்லியன் டாலராக இருக்கும்.

அனைத்து நகைகள், வைரங்கள், ரத்தினங்கள் என அனைத்தும் தற்போது டெல்லியில் இருக்கும் ரிசர்வ் வங்கி கஜானாவில் உள்ளது. தற்போது ஆர்பிஐ கஜானாவில் இருக்கும் பட்டியிலிடப்பட்ட நகைகளின் மதிப்பு மட்டும் ₹50,000 கோடி. இந்திய அரசு 1995ம் ஆண்டு நிஜாம் குடும்பத்தின் அளவிற்கு அதிகமான சொத்துக்களை அரசு உடைமையாக்கியது. நகைகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி கைப்பற்றியது. அன்றைய மதிப்பில் இது ₹218 கோடி என்று அரசு பதிவு செய்துள்ளது. இன்று இது 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நகைகள் அனைத்தும் 2001 மற்றும் 2006ம் ஆண்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

இந்தக் கண்காட்சி பல லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. தற்போது கடைசி நிஜாம் கொள்ளுப்பேரன் ஹிமாயத் அலி மஸ்ரா தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அவரச சட்டத்தின் மூலம் நம்முடைய பாரம்பரிய நகைகளை நம் மாநிலத்திற்குக் கொண்டு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் ஐதராபாத் நகரத்திலேயே மியூசியத்தில் இந்த நகைகளை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார் ஹிமாயத் அலி மஸ்ரா. நிஜாம் நகைகளில் ஜகோப் வைர நகைகள் 184.75 காரட் எடை கொண்ட 173 கற்கள் பதிக்கப்பட்டது. தலைப்பாகை, கழுத்தணிகள், பெல்ட்கள் மற்றும் கலன்கள், வளையல்கள், காதணிகள், கவசங்கள், கால் வளையங்கள், விரல் மோதிரங்கள், வாட்ச் சங்கிலிகள், கைவளையல்கள், பொத்தான்கள் உள்ளிட்டவை உள்ளன.

இந்நிலையில் மத்திய இணையமைச்சர் கிஷண் ஐதராபாத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிருபர்களிடம் கூறுகையில், ‘நிஜாமின் நகைகளைப் பாதுகாக்க வலுவான பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய கட்டிடத்தை மாநில அரசு வழங்கினால், அவற்றை மீண்டும் ஐதராபாத் கொண்டு வருவதில் மத்திய அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மேலும் நாட்டில் இருந்து திருடப்பட்ட மற்றும் எடுத்துச் செல்லப்பட்ட 95 சதவீத பாரம்பரிய கலைப்பொருட்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில அரசு நிஜாம் நகைகளை பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய கட்டிடம் அமைத்து கொடுத்தால் ரிசர்வ் வங்கி கஜானாவில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிஜாம் நகைகள் விரைவில் ஐதராபாத்தில் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்படும்’ என்றார்.

Tags : Andhra Pradesh government ,Nizam ,Reserve Bank ,Hyderabad , Thirumalai: If the Andhra Pradesh government builds a safe building, the Reserve Bank will have ₹ 50 billion worth of Nizam's jewelery in Hyderabad.
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...