சீனாவில் 24வது குளிர்கால ஒலிம்பிக் தொடர் கண்கவர் வான வேடிக்கையுடன் நிறைவு!: 37 பதக்கங்களுடன் நார்வே முதலிடம்..!!

பெய்ஜிங்: கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சீனாவில் நடைபெற்ற 24வது குளிர்கால ஒலிம்பிக் தொடர், வான வேடிக்கை உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகளுடன் முடிவுக்கு வந்தது. இந்தியா உள்பட 91 நாடுகள் கலந்துக்கொண்ட குளிர்கால ஒலிம்பிக் கடந்த 4ம் தேதி முதல் சீனாவின் 3 நகரங்களில் நடைபெற்று வந்தது. இதில் குளிர்கால விளையாட்டுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நார்வே நாடு எதிர்பார்த்ததை போன்றே அதிக பதக்கங்களை குவித்து பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்நிலையில் போட்டியின் கண்கவர் நிறைவு விழா பெய்ஜிங்கில் உள்ள பறவைக்கூடு ஸ்டேடியத்தில் விமர்சியாக நடைபெற்றது. இதையொட்டி போட்டியில் பங்கேற்ற நாடுகளின் வீரர்கள் அரங்கில் அணி வகுத்தனர்.

16 தங்கம் உள்பட 37 பதக்கங்களை குவித்த நார்வே மற்றும் போட்டியை நடத்திய சீன குழுவினர் அரங்கில் வளம் வந்த போது சத்தம் விண்ணை பிளந்தது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளிர்கால ஒலிம்பிக் நடத்தப்படுகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் வெற்றிகரமாக போட்டியை நடத்திய சீனாவுக்கு சர்வேதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தாமஸ் பாச் வாழ்த்து தெரிவித்தார். கோவிட் தொற்றை முறியடிக்க ஒட்டுமொத்த உலகமும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை அவர் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து போட்டி முடிவுக்கு வருவதாக பாச் அறிவித்தார்.

இதையடுத்து ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு, அடுத்து போட்டியை நடத்தும் இத்தாலியிடம் ஒப்படைக்கப்பட்டது. மிலான் மற்றும் கார்டினா ஜி ஆம்பசோ நகர மேயர்கள் இந்த கொடியை பெற்றுக்கொண்டனர். அப்போது இத்தாலி தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் 8 நிமிட நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினர். இறுதியாக அரங்கேறிய வாணவேடிக்கைகள் பலரையும் சிலிர்க்க வைத்தன. நிறைவு விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங், தமது மனைவியுடன் கலந்துகொண்டார். பெய்ஜிங் குளிர்கால பதக்க பட்டியலில் 16 தங்கம், 8 வெள்ளி உள்பட 37 பதக்கங்களுடன் நார்வே முதலிடம் பிடித்தது.

ஜெர்மனி 12 தங்கம் உள்ளிட்ட 27 பதக்கங்களுடன் 2ம் இடத்தையும், போட்டியை ஏற்றி நடத்திய சீனா 9 தங்கம் உள்பட 15 பதக்கங்களுடன் 3ம் இடத்தையும் பிடித்தன. சீனாவின் மனித உரிமை மீறல்கள் காரணமாக குளிர்கால ஒலிம்பிக்கை அமெரிக்கா, ஆசுதிரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட சில நாடுகள் தூதரக ரீதியில் புறக்கணித்தது நினைவுகூரத்தக்கது. அதே சமயம் கோடைகால ஒலிம்பிக்கையும், குளிர்கால ஒலிம்பிக்கையும் அடுத்தடுத்து ஏற்றி நடத்திய நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. 

Related Stories: