×

தொடரும் மலையேற்றம் விபத்து!: பெங்களூரு அருகே நந்தி மலையில் செங்குத்தான பாறையில் தவறி விழுந்த இளைஞர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு..!!

பெங்களூரு: பெங்களூரு அருகே மலையேற்றத்துக்கு நந்தி மலைக்கு சென்ற இளைஞர் செங்குத்தான பாறையில் தவறி விழுந்தார். செல்போன் மூலம் போலீசாரை தொடர்புகொண்டதால் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் 5 மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டார். பெங்களூரு அருகே 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சுற்றுலா மையமாக விளங்கும் நந்தி மலை என்று அழைக்கப்படும் பிரம்மகிரி குன்று. வார இறுதி நாட்களில் மலையேற்றம் செல்லவும், மலை மீது உள்ள சொகுசு விடுதிகளில் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கவும் ஏராளமானோர் அங்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் டெல்லியை சேர்ந்த 19 வயதான நிஷாந்த் சர்மா என்ற பொறியியல் மாணவர், மலையேற்றம் செல்ல நந்தி மலைக்கு சென்றுள்ளார். 300 அடி உயரமுள்ள செங்குத்தான மலை பாதையில் கயிற்றை கொண்டு மலையேறிய நிஷாந்த், எதிர்பாராத விதமாக தவறி 200 அடி உயரத்தில் உள்ள பாறையில் விழுந்துள்ளார். மூக்கில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையிலும், செல்போன் மூலம் போலீசாரை தொடர்புகொண்டு தனது நிலையை தெரியப்படுத்தி இருப்பிடத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதனால் எளிதாக அவர் சிக்கிய பாறையை கண்டறிந்து வந்த போலீசாருடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இளைஞரை மீட்கும் முயற்சியில் இறங்கியது. ஆனால் 30 அடியை தாண்டி அவரை கீழே இறக்க முடியாததாலும், படுகாயம் அடைந்த நிலையில் கீழ் இழுப்பது ஆபத்தானது என்பதையும் உணர்த்த மீட்பு படையினர், இந்திய விமானப்படையின் உதவியை நாடினர். இதையடுத்து ஹெலெஹன்கா விமானப்படை தலத்தில் இருந்து விரைந்த எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர், கூரிய பாறை மீது தரை இறங்க முடியாத சவாலான நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனால் வானில் ஹெலிகாப்டர் பறந்த நிலையிலேயே கயிறு மூலம் தொங்கியவாறு கீழ் இறங்கிய வீரர், இளைஞரை பத்திரமாக மீட்டார். 5 மணி நேரம் முயற்சிக்கு பின்னர் மீட்கப்பட்ட இளைஞர், முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் 45 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Nandi hill ,Bangalore , Bangalore, Nandi Hills, Steep Rock, Youth
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை