×

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் இலவச டிக்கெட்டில் தரிசிக்க 4 நாள் காத்திருக்க வேண்டும்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதியில் வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட்டுகளை வைத்து ஏழுமலையான தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 4 நாட்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஓராண்டுக்குப் பிறகு இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய மூன்று இடங்களில்  இருந்து கடந்த 15ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.  

தினந்தோறும் 10,000 டிக்கெட்டுகள் என வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் மறுநாள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்தது. டிக்கெட் வழங்க தொடங்கியதில் இருந்து இதனை பெறுவதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து திருப்பதிக்கு வந்தபடி இருந்தனர்.
இதன்காரணமாக அடுத்தடுத்த நாட்களுக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று(நேற்று)  20ம் தேதி வழங்கப்பட்ட டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு 24ம் தேதி தான் சுவாமி தரிசனம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது.  எனவே தொடர்ந்து பக்தர்கள் வருகை இதேபோன்று இருந்து வருவதால் இலவச தரிசன டிக்கெட்டுகள் மூலம் சுவாமி தரிசனத்திற்கு 4 நாட்கள் பக்தர்கள் திருப்பதியில் தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டி இருக்கும். எனவே பக்தர்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொண்டு வரவேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கூட்டம் சேர்வதை தவிர்ப்பதற்காகவே கடந்த ஓர்  ஆண்டுக்கு முன்பு இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் வழங்குவது ரத்து செய்யப்பட்டு ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்யும் விதமாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Devotees Crowd, Free Tickets, Thirumalai Devasthanam
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...