×

யாஷ் துல், துருவ் ஷோரி அபார சதம் ரஞ்சியில் தமிழகம் - டெல்லி டிரா

கவுகாத்தி: தமிழகம் - டெல்லி அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை எலைட்-பி பிரிவு லீக் போட்டி டிராவில் முடிந்தது. கவுகாத்தியில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் டெல்லி அணி 452 ரன் குவித்து ஆல் அவுட்டானது. யாஷ் துல் 113, லலித் யாதவ் 177, ஜான்டி சித்து 71 ரன் விளாசினர். தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 494 ரன் குவித்து அசத்தியது. பாபா இந்திரஜித் 117 ரன், ஷாருக் கான் 194 ரன், கவுஷிக் காந்தி 55, நாராயண் ஜெகதீசன் 50 ரன் விளாசினர்.

கடைசி நாளான நேற்று, 42 ரன் பின்தங்கிய நிலையில் டெல்லி 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் யாஷ் துல், துருவ் ஷோரி இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். டெல்லி அணி 60.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 228 ரன் எடுத்த நிலையில், இப்போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிரா ஆனது. யாஷ் துல் 113 ரன் (202 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்), துருவ் ஷோரி 107 ரன்னுடன் (165 பந்து, 13 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷாருக் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால், தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தன. டெல்லி அணி 1 புள்ளியுடன் திருப்தி அடைந்தது.தமிழகம் தனது அடுத்த லீக் போட்டியில் சத்தீஷ்கர் அணியை சந்திக்கிறது. இப்போட்டி கவுகாத்தியில் பிப்.24ம் தேதி தொடங்குகிறது.

தூள் கிளப்பிய துல்!
ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில், அறிமுக போட்டியின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசி சாதனை படைத்த 3வது வீரர் என்ற பெருமை டெல்லியின் யாஷ் துல்லுக்கு கிடைத்துள்ளது. தமிழக அணிக்கு எதிராக கவுகாத்தியில் அறிமுகமான துல், முதல் இன்னிங்சில் 113 ரன்னும், 2வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 113 ரன்னும் விளாசியது குறிப்பிடத்தக்கது.. முன்னதாக, 1952-53 ரஞ்சி சீசனில் குஜராத் வீரர் நாரி கான்ட்ராக்டர், 2012-13 சீசனில் மகராஷ்டிராவின் விராக் அவதே இருவரும் இந்த  சாதனையை நிகழ்த்தி இருந்தனர்.

Tags : Yash Thul ,Thuruvshori Apara Satham Ranji ,Tamil Nadu ,Delhi , Yash Thul, Dhruv Shori, Ranji, Tamil Nadu, Delhi
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...