×

ஆஸ்திரேலியாவுடன் 5வது டி20 இலங்கைக்கு ஆறுதல் வெற்றி: ‘ஒயிட் வாஷ்’ தவிர்ப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்திய இலங்கை அணி ‘ஒயிட் வாஷ்’ ஆவதை தவிர்த்தது. மெல்போர்னில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் குவித்தது. இங்லிஸ் 23, மேக்ஸ்வெல் 29, ஸ்டாய்னிஸ் 19, சாம்ஸ் 18 ரன் எடுத்தனர்.

அதிரடியாக விளையாடிய மேத்யூ வேட் 43 ரன் (27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஏகார் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் குமாரா, சமீரா தலா 2, ஜெயவிக்ரம, சமிகா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து வென்று, தொடரை முழுமையாக இழப்பதை தவிர்த்தது. அசலங்கா 20, கேப்டன் ஷனகா 35 ரன் எடுத்தனர்.

பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 69 ரன் (58 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), சமிகா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் கேன் ரிச்சர்ட்சன் 2, ஏகார் 1 விக்கெட் வீழ்த்தினர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. குசால் மெண்டிஸ் ஆட்ட நாயகன் விருதும், மேக்ஸ்வெல் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். அடுத்து இந்தியா வரும் இலங்கை அணி 3 டி20, 2 டெஸ்டில் விளையாட உள்ளது. முதல் டி20 லக்னோவில் பிப்.24ம் தேதி நடக்கிறது.

Tags : Sri Lanka ,Australia ,Whitewash , Australia, Sri Lanka, consolation win, ‘Whitewash’
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...