×

சமாஜ்வாடி மீது பிரதமர் மோடி தாக்கு தீவிரவாதிகளிடம் அனுதாபம்

ஹர்தோய்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயில் நேற்று நடந்த பாஜ பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
குஜராத் முதல்வராக நான் இருந்தபோது, ​​கடந்த 2008ல் அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அப்போது, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எங்கு இருந்தாலும் கண்டுபிடித்தே தீர வேண்டும் என எனது அரசு சபதம் எடுத்தது. இன்று, நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை வழங்கி உள்ளது. (அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 38 பேருக்கு மரணதண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 18ம் தேதி வழங்கி தீர்ப்பளித்தது)

ஆனால்,உத்தரப்பிரதேச மாநிலத்தில் முன்பு இருந்த சமாஜ்வாடி அரசு தீவிரவாதிகள் மீது அனுதாபம் காட்டி உள்ளது. 2006ல் அந்த கட்சி ஆட்சிக்கு வந்ததும், வாரணாசி ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஷமிம் அகமது மீதான வழக்கை வாபஸ் பெற முயற்சித்தது. 2007ல் அயோத்தி மற்றும் லக்னோ நீதிமன்ற வளாகங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. அதன் குற்றவாளிகள் மீதான வழக்கை சமாஜ்வாடி அரசு வாபஸ் பெற்றது. ஆனால், அந்த சதியை நீதிமன்றம் அனுமதிக்கவில்லை, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இன்னும் நிறைய வழக்குகளை சமாஜ்வாடி வாபஸ் பெற்றுள்ளது. இதுபோன்ற சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் அணுகுமுறை மிகவும் ஆபத்தானது. இவர்கள் ஒசாமா பின்லேடன் போன்ற தீவிரவாதிகளை கூட ‘ஜி’ என மரியாதையாக அழைக்கக் கூடியவர்கள். இவர்கள் மீது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் பதவிக்காக நாட்டை கூட பணயம் வைக்கலாம். நாட்டின் பாதுகாப்போடு விளையாடுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அருணாச்சல் அதிவேக வளர்ச்சி
அருணாச்சல பிரதேசத்தின் 36வது மாநில தினம் மற்றும் அதன் பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று வாழ்த்து தெரிவித்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசிய பிரதமர் மோடி, 21ம் நூற்றாண்டில் வடகிழக்கு பகுதிகள் நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை என்று மோடி கூறினார். கடந்த ஏழு ஆண்டுகளில் அருணாச்சலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு, இதற்கு முன் இல்லாத வகையில், பல்வேறு நவீன கட்டமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Tags : Modi ,Samajwadi , Samajwadi Party, Prime Minister Modi, extremist
× RELATED காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள்...