×

ஓராண்டுக்குப்பிறகு குளிக்க அனுமதி கும்பக்கரை அருவிக்கு போக பேட்டரி கார்

பெரியகுளம்:  தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, கடந்தாண்டு பிப்ரவரியில், சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லவும், குளிக்கவும் வனத்துறை தடை விதித்தது. தொடர்ந்து ஓராண்டாக அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், நோய்த் தொற்று குறைந்ததால், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து, மாநிலத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவும், அருவிகளில் குளிக்கவும் அனுமதி வழங்கியது.

 இதையடுத்து, ஓராண்டுக்குப் பிறகு, கடந்த 15ம் தேதி கும்பக்கரை அருவியில் குளிக்க, வனத்துறையினர் அனுமதி வழங்கினர். மேலும், வனத்துறை கேட் பகுதியிலிருந்து அருவிக்கு செல்ல பேட்டரி கார் வசதியையும் வனத்துறை புதிதாக ஏற்படுத்தியுள்ளது. அருவி வரை நடக்கும் அலைச்சல் குறைந்திருப்பதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று காலை 9 மணி முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நீர்வரத்து குறைவாக இருந்தாலும், குளிர்ந்த நீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும், நண்பர்களுடன் சேர்ந்து ‘‘செல்பி’’ எடுத்து மகிழ்ந்தனர்.

Tags : Kumbakara Falls , Permission to bathe, Kumbakara Falls, battery car
× RELATED வெள்ளப்பெருக்கு காலங்களில்...