கள்ள ஓட்டு போட்டதாக கூறி சாலை மறியல் பாஜ மாவட்ட தலைவர் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு

அண்ணாநகர்: டி.பி.சத்திரம் வாக்குச்சாவடியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் ஓட்டை, கள்ள ஓட்டு போட்டதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜ மாவட்ட தலைவர் உட்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மாமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, 101வது வார்டு அண்ணாநகர் கிழக்கு, டி.பி.சத்திரம் குஜ்ஜி தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், தனது வாக்கை செலுத்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று வந்தார். அப்போது, டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கை செலுத்தியது தெரிந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த பாஜவினர் வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் பூத் ஏஜென்ட்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரப்பரப்பு நிலவியது. இதையடுத்து, பாஜ மாவட்ட தலைவர் தனசேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் டி.பி.சத்திரம் காவல் நிலையம் முன்பு திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கள்ள ஓட்டு போட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், என கோஷமிட்டனர்.

போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் தேர்தல் அதிகாரி மற்றும் ஏஜென்ட்களிடம் விசாரித்தபோது, அதே வாக்குச்சாவடியில் 2 முருகன் பெயர்கள் இருப்பதும், ஆர்.முருகனின் வாக்கை தவறுதலாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் என பூத் ஏஜென்ட்கள் எழுதி கொடுத்ததும் தெரியவந்தது. ஆர்.முருகன் சரியாகதான் ஓட்டு போட்டுள்ளார்.

பூத் ஏஜென்ட்களின் கவனக்குறைவால் தவறு நடந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கொரோனா வீதிமீறியும், அனுமதியின்றியும் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜ மாவட்ட தலைவர் தனசேகர் உள்ளிட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: