×

பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 46வது வார்டில் ஆர்.கே.நகர் பாணியில் டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா செய்த பாஜ வேட்பாளர்: தேர்தல் ஆணையத்தில் முறையிட கட்சிகள் முடிவு

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 46வது வார்டில், ஆர்.கே.நகர் பாணியில் டோக்கன் கொடுத்து பாஜ வேட்பாளர் பணப்பட்டுவாடா செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் முறையிட கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் அதிமுக கூட்டணியுடன் தேர்தல்களை சந்தித்து வந்த பாஜ, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து விடப்பட்டது. இந்த தேர்தலில் தங்களது வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என, தங்களது வேட்பாளர்களுக்கு தமிழக பாஜ தலைமையிடம் உத்தரவிட்டிருந்தது.

 இதற்காக, பெரும்பாலான இடங்களில் வசதி படைத்த நபர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. இவர்களுக்காக பாஜவினர், 100 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதி என பிரித்து பணப்பட்டுவாடா செய்துள்ளனர். அந்த வகையில் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 46வது வார்டில் பாஜ சார்பில் கல்பனா என்பவர் போட்டியிட்டார். இவரது கணவர் கோட்டீஸ்வரன் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜ நிர்வாகியாக உள்ளார். இவர்கள், தங்களது வார்டுக்கு உட்பட்ட மல்லிப்பூ காலனி, சாமந்திப்பூ காலனி, கல்யாணபுரம், ஜே.ஜே.நகர், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஓட்டுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கொடுத்துள்ளனர்.

பல இடங்களில் நிர்வாகிகள் 500 ரூபாயில் இருந்து அவர்களது கமிஷனை எடுத்துக் கொண்டு சில இடங்களில் ரூ.200 வரை கொடுத்துள்ளனர்.  இந்நிலையில், தேர்தல் முடிந்த பின்பு சிலருக்கு பணம் தருவதாக வாக்குறுதி அளித்து அதற்காக டோக்கன் தயார் செய்து, வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை போன்று, அந்த பார்முலாவை வியாசர்பாடி பகுதியில் பாஜவினர் அரங்கேற்றியுள்ளனர். அதன்படி, தேர்தலில் பாஜவிற்கு வாக்களித்த பலர், தங்களிடம் இருந்த டோக்கனை எடுத்துக்கொண்டு அவர்களது பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட பாஜ நிர்வாகியை சந்தித்து, அவரிடம் கொடுத்து பணத்தை பெற்று சென்றுள்ளனர்.

 இது தேர்தல் முடிந்த ஒரு மணி நேரத்தில் வெட்டவெளிச்சமாக வியாசர்பாடி பகுதியில் அரங்கேறியது. அந்த டோக்கனில் முன்பக்கம் தாமரை சின்னமும் பின்பக்கம் ஏ.கே என்ற அடையாளமும் இருந்தது. ஏ.கே என்றால் ஏ.கோடீஸ்வரன் என்ற பொருள். அந்த அளவிற்கு டோக்கன் கொடுத்து அடித்தட்டு மக்களை ஏமாற்றி பாஜவினர் வாக்குகளை பெற்றுள்ளனர். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க திமுக உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளனர். இதுபோன்று சென்னையில் பல இடங்களிலும் பாஜவிற்கு ஓட்டு வங்கி உள்ளது என்பதை நிரூபிக்க அக்கட்சி வேட்பாளர்கள் டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது.

Tags : 46th Ward ,Perampur Constituency ,R.R. KK Paja ,Election Commission , RK Nagar, Token, Non-payment, Election Commission,
× RELATED காஞ்சிபுரம் 46வது வார்டில் ரூ.18 லட்சம்...