×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்: வெற்றி விழாவுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் செல்வேன்; திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ‘‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைபெறுவோம் என்றும், வெற்றி விழாவுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் செல்வேன்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற, திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை- தமிழ்ச்செல்வி ஆகியோரது மகன் கலை கதிரவன்-சந்தியா பிரசாத் இணையரின் திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்தார். திருமணவிழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். சென்னை மாநகரத்தின் மேயராக இருந்திருக்கிறேன். திமுகவின் பல பொறுப்புகளில் இருந்திருக்கிறேன். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். துணை முதல்வராக  இருந்திருக்கிறேன். இப்போது முதல்வராக இருக்கிறேன். இத்தனை ஆண்டு காலத்தில், அவர் என்னிடத்தில் வந்து, இந்தக் காரியத்தை செய்து கொடுங்கள் என்று ஒருமுறைகூட கேட்டதில்லை. இனிமேலும் கேட்பாரா என்று கேட்டால், நிச்சயமாகக் கேட்க மாட்டார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

நான் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால், ‘நமக்கு நாமே’ என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணத்தை நடத்தினேன். அனைத்துத் தரப்பு மக்களையும் நான் சென்று சந்தித்தேன். விவசாயிகள், தொழிலாளர்கள், பாட்டாளி பெருமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள் - இவ்வாறு பலதரப்பட்ட மக்களை எல்லாம், தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் நான் சுற்றுப்பயணம் செய்து, நேரடியாகச் சென்றேன்.

அவ்வாறு செல்வதற்கு முன்பு, நம்முடைய அன்பகம் கலைதான், அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து, முறைப்படுத்தி, ஒரு நிகழ்ச்சியை இவ்வாறு நடத்த வேண்டும் என்று சொல்லிவிட்டால், அதில் நான் என்ன நினைக்கிறேனோ, அதை விடப் பலமடங்கு வெற்றியாக நடத்திக்காட்டும் ஆற்றலை நம்முடைய அன்பகம் கலை பெற்றிருக்கிறார். எனவே இன்றைக்கு அவருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த திருமண நிகழ்ச்சியில், உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்று, இந்த நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று, இந்த மணவிழாவை நடத்தி வைக்கும் வாய்ப்பை பெற்றமைக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

நாளை மறுநாள்(நாளை), நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வரவிருக்கிறது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த வெற்றிக்கு இடையில் இந்த திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன்.

நான் அதிகம் பேசமாட்டேன். இப்போதுகூட தேர்தல் நேரத்தில் காணொலிக் காட்சியில் நான் பேசி முடித்துவிட்டேன். மக்களைச் சந்திக்க வருவதற்கு தைரியம் இல்லை என்று என்னைப்பற்றி சிலர் பேசினார்கள். என்னைப் பார்த்து, மக்களைப் பார்க்க தைரியம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். எதற்காக நான் காணொலிக் காட்சியின் மூலமாக அந்தப் பிரசாரத்தை நடத்தினேன் என்று கேட்டால், கொரோனா காலமாக இருக்கின்ற காரணத்தால், அந்தத் தொற்றுக்காக அரசு சில விதிமுறைகளை அறிவித்திருக்கின்ற காரணத்தால்தான், நான் நேரடியாகச் செல்லவில்லை.  

அதே நேரத்தில் நான் பேசிய அனைத்துக் கூட்டங்களிலும் சொன்னேன், தேர்தல் முடிந்து அதனுடைய வெற்றி விழா நடக்கின்ற போது, நிச்சயமாக உறுதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன் என்று சொல்லி இருக்கிறேன். எனவே தேர்தல் நேரத்தில் பணியாற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் அன்பகம் கலை இல்ல மணவிழா நிகழ்ச்சியின் மூலமாக, என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளை, பாராட்டுதல்களை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Thimuya ,Urban Local Election ,KKA Stalin , Urban Local Elections, Victory Ceremony, Marriage Ceremony, Chief Minister MK Stalin,
× RELATED நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக...