×

வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை அகற்றக்கோரி பாஜ ஏஜென்ட் வாக்குவாதம்: மேலூரில் பரபரப்பு

மேலூர்: மேலூரில் வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்பை பாஜ பூத் ஏஜென்ட் அகற்றக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.   மதுரை மாவட்டம்,  மேலூர் நகராட்சி 8வது வார்டுக்கான வாக்குப்பதிவு இங்குள்ள அல்அமீன் பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று நடந்தது. இங்கு வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களிடம் ஹிஜாப்பை அகற்றச் சொல்லி, பாஜ பூத் ஏஜென்ட் கிரிநந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ``முகம் சரியாகத் தெரியவில்லை. அதனால், ஹிஜாபைக் கழற்றிவிட்டு வாருங்கள்” எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு பெண்கள், ‘‘எப்போதும் ஹிஜாப் அணிந்து வந்து வாக்களித்துச் செல்வது வழக்கம். வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதை கண்டிக்கிறோம்’’ என்று வாதிட்டனர். அதை ஏற்காமல் கிரிநந்தன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து திமுக, அதிமுகவினர் பாஜ ஏஜென்டின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டது.

உடனே திமுக, அதிமுக உள்ளிட்ட ஏஜென்ட்கள், அங்கிருந்த அதிகாரிகள், பாஜ ஏஜென்டின் செயலை கண்டித்து வாக்குப்பதிவு மையத்தை விட்டு வெளியேறினர். இதனைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜ பூத் ஏஜென்டை வாக்குப்பதிவு மையத்திலிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து பாஜவினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். பின்னர் அக்கட்சி சார்பில் மற்றொருவர் பூத் ஏஜென்டாக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வாக்குப்பதிவு  துவங்கியது.

சிறிது நேரத்தில் கிரிநந்தன் மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்தார். ஹிஜாப் அணியக்கூடாது என்று மீண்டும் பிரச்னையில் ஈடுபட்ட அவர், அங்கிருந்த வாக்கு இயந்திரத்தையும் தள்ள முயன்றதால் மறுபடியும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை டூவீலரில் ஏற்றிச் சென்றி ஜீப்பில் ஏற்றி, கீழவளவு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர்  4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

திருப்பூரிலும் ஹிஜாப் பிரச்னை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி 17வது வார்டு வலைக்கார வீதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்ணை ஹிஜாப் முகத்திரையை அகற்றி முகத்தை காட்டுமாறு வாக்குசவாடி பாஜ ஏஜென்ட் ஒருவர் கூறியதால் பிரச்னை எழுந்தது. பூத் ஏஜென்டின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம்  வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு பின் வழக்கம்போல் நடந்தது.

Tags : Bajaj , Of Muslim women who came to vote Remove the hijab Bajaj agent controversy: Stir in Melur
× RELATED உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்க...