×

பட்ஜெட்டில் நிதிநிலை சீர்திருத்தம் வருவாய் பற்றாக்குறையை இந்த வருடம் திருத்துவோம்: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதி

மதுரை: பட்ஜெட்டில் நிதிநிலையில் சீர்திருத்தத்தை காண்பிப்போம், வருவாய் பற்றாக்குறையை இந்த வருடம் திருத்துவோம் என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். மதுரை மாநகராட்சி காக்கை பாடினியார் மகளிர் பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று வாக்களித்த பின் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி:   ஜனநாயகத்திற்கு விரோதமாக சட்டமன்றத்திற்கு வராத 18  பேரை நீக்கி, கட்சியை எதிர்த்து வாக்களித்த 12 பேரை சட்டத்திற்கு விரோதமாக மன்றத்திற்குள் வைத்து, ஊழலுடன் ஆட்சியில் நீடித்த அதிமுகவினர், ஜனநாயகரீதியாக வெற்றி கண்ட திமுக அரசை முடக்கப் போவதாக உளறி வருகின்றனர்.  ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை. இது அடிப்படை அறிவற்ற வாதம்.  முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறந்த தலைமைத்துவம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  திமுகவிற்கு மாபெரும் வெற்றியைத் தரும்.

 ஜிஎஸ்டி கூட்டத்தில் எனது உரை பெரும் தாக்கம் தந்தது உண்மை. கூட்டத்தில் தகவலோடு உரையாற்றி எனது வாதத்தை அறிக்கையாக சமர்ப்பித்தேன். இதனை பிரச்சனையாக்குவதாக சொன்னால் ஜிஎஸ்டி நிலைக்குழுவில் என்னை ஏன் உறுப்பினராக போட்டனர்? அனைவருடனும் இணைந்து பேசி நாட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் செயலாற்றி வருகிறோம். செயல்பட வேண்டியது மாநிலங்கள், மாவட்டங்கள், உள்ளாட்சிகள். இதனை வைத்துதான் கட்டமைப்பை திருத்த முடியும். எல்லாவற்றையும் ‘‘ஒரே.. ஒரே’’ என்று டெல்லியில் இருந்து செய்ய முடியாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் மாநிலத்தின் நிதி நிலைமை சரிந்தது. வருவாய் பற்றாக்குறை அதிகரித்து கடன் வாங்க கூடிய எல்லையை மீறி சுமார் ₹30  ஆயிரம் கோடியை ஒளிவு மறைவாக எடுத்துள்ளனர். இதனை வெள்ளை அறிக்கையில் காண்பித்துள்ளேன். அந்த அளவு  இருந்த சூழ்நிலையை, சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு ஒரே ஆண்டில் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலைகளை தாண்டி, முதல் முறை ஆட்சிக்கு வந்தவர் என்பதையும் தாண்டி, பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பெட்ரோல் விலை குறைப்பு, மகளிர் சுயஉதவி குழு கடன் ₹2,600  கோடி  தள்ளுபடி, குடும்ப அட்டைதாரருக்கு ₹4,000 என பல வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.

அதன்பிறகு, இந்த ஆண்டு நிதி நிலைமை சீர்திருத்தத்தை காண்பிக்க போகிறோம். இதுதான் சிறந்த தலைமையின் அடையாளம். இதன் வெளிப்பாட்டை விளைவை வைத்து யாருடைய ஆட்சி சிறந்தது என்பதை மக்கள் முடிவெடுக்கட்டும்.  பட்ஜெட் என்பது வரக்கூடிய ஆண்டிற்கான இலக்கு. தலை இல்லாத வால்களும், கால்களும் ஆட்சி நடத்தியதால் தமிழ்நாட்டில் நிதி நிலைமை சரிந்தது. வருவாய் பற்றாக்குறையை இந்த வருடம் திருத்துவோம். வாரம்தோறும் இதற்கான கூட்டம் நடத்தி கோப்புகளை தீவிரமாக ஆய்வு செய்து திருத்திக்கொண்டு வருகிறோம். அதனை செம்மையாக செய்து முடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Finance Minister ,PDR Palanivel Thiagarajan , Fiscal reform in the budget Revenue shortfall We will correct this year: Finance Minister PDR Palanivel Thiagarajan confirmed
× RELATED ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களை...