×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பட்டியலின பெண்ணை தாக்கிய தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும்: தமிழக டிஜிபிக்கு கே.பாலகிருஷ்ணன் புகார் கடிதம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகார் கடிதத்தில் கூறியுள்ளதாவது: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 13ம் தேதி சாமி தரிசனம் செய்யச் சென்ற ஜெயஷீலா என்ற பட்டியலின பெண்ணை அங்கிருந்த தீட்சிதர்கள் சாதியின் பெயரைச் சொல்லி திட்டியும், கேவலமாக பேசியும், கையால் தாக்கியும் கீழே தள்ளியுள்ளனர். இது தீண்டாமை வன்கொடுமையாகும். இதுகுறித்து ஜெயஷீலா சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் புகார் செய்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  வழக்குப் பதிவு செய்து ஆறு நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்கள்.ஆனால், மாவட்ட காவல்துறையினர் கண்டும், காணாமலும் இருப்பதும், கைது செய்யாமல் இருப்பதும் நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்கு உடந்தையாக செயல்படும் நடவடிக்கையாக உள்ளது. இது குற்றவாளிகள் அனைவரையும் தப்புவிக்கும் சட்டவிரோதமான  நடவடிக்கையாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் பக்தர்களை தாக்குவது, குறிப்பாக பெண்களை தாக்குவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களை  கோவிலை மையமாக பயன்படுத்தி செயல்படுகின்றனர்.மேலும் பட்டியலின மக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மறுப்பது, அப்படியே கோயிலுக்குள் நுழைபவர்களை தாக்குவது, கேவலமாக பேசுவது, கொலை மிரட்டல் விடுவது, தீண்டாமைக் கொடுமைகளை இழைப்பது போன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். அப்படி இவர்கள் மீது வரும் புகார்களை மாவட்ட காவல்துறையினர் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதில்லை.இது குற்றவாளிகளுக்கு மேலும் கூடுதலாக ஊக்கப்படுத்தும் செயலாக அமைந்து விடுகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் பட்டியலின பெண்ணை தாக்கிய தீட்சிதர்கள் அனைவரையும் உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு  உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



Tags : Dixit ,Chidambaram Natarajar Temple ,K. Balakrishnan ,Tamil Nadu ,DGP , Chidambaram attacked the woman on the list at the Natarajar temple Dixit should be arrested: K. Balakrishnan's complaint letter to Tamil Nadu DGP
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...