நிதிஷ் குமார் - பிரசாந்த் கிஷோர் இரவு விருந்தில் ரகசிய சந்திப்பு: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன், பிரசாந்த் கிஷோர் திடீரென சந்தித்து பேசியது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்படும் பிரசாந்த் கிஷோர், கடந்த 2015ம் ஆண்டு நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசார வியூகங்களை வகுத்து கொடுத்து தேர்தலில் வெற்றி பெற வைத்தார். தேர்தல் முடிந்த பின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து, கட்சியின் துணைத் தலைவரானார். பின்னர், கட்சியின் தலைவரும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பீகார் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், நிதிஷ் குமாரை பிரசாந்த் கிஷோர் நேற்று முன்தினம் இரவு திடீரென சந்தித்து பேசினார். அப்போது, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இரவு விருந்தில் பங்கேற்றார். இருவரும் 2 மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நிதிஷ் குமார் கூறுகையில், ‘இது சாதாரண சந்திப்பு தான். இது குறித்து ஊடகங்கள் தங்கள் யூகங்களை தவிர்க்க வேண்டும்,’ என்று கேட்டுக் கொண்டார். இது மரியாதை நிமித்தமாக நடைபெற்ற சந்திப்புதான் என்று பிரசாந்த் குமாரும் தெரிவித்தார்.

Related Stories: