×

இலங்கையுடன் டெஸ்ட் தொடர்.. இந்திய அணிக்கு ரோகித் கேப்டன்

* புஜாரா, ரகானே அதிரடி நீக்கம்
* டி20ல் கோஹ்லி, பன்ட்டுக்கு ஓய்வு

மும்பை: இலங்கை அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் டி20  தொடரில்  விளையாட உள்ள இந்திய அணிகளை பிசிசிஐ நேற்று அறிவித்தது. டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாகவும் ரோகித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அனுபவ வீரர்கள் புஜாரா, ரகானே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. டி20 போட்டிகள் பிப்.24 (லக்னோ), பிப்.26, 27ல் (தர்மசாலா) நடைபெறும். முதல் டெஸ்ட் மொஹாலியிலும் (மார்ச் 4-8), 2வது டெஸ்ட் பெங்களூருவிலும் (மார்ச் 12-16) நடைபெற உள்ளன.இந்த தொடர்களுக்கான அணிகளை பிசிசிஐ நேற்று அறிவித்தது. கோஹ்லிக்கு பதிலாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலைமையேற்றுள்ள ரோகித், டெஸ்ட் போட்டிகளுக்கான முழுநேர கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அனுபவ வீரர்கள் ரகானே, புஜாரா, இஷாந்த், சாஹா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

உத்தர பிரதேச ஸ்பின்னர் சவுரவ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தால் அவதிப்படும் அஷ்வின் பெயர் அணியில் இருந்தாலும், உடல்தகுதியை பொறுத்தே களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கும். வாஷிங்டன்,  கே.எல்.ராகுல் காயம் காரணமாக இடம் பெறவில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் வெங்கடேஷ், ஹர்ஷல்,  சாஹல், ஆவேஷ் ஆகியோர் டி20 அணியில் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ளனர்.

டெஸ்ட் அணி: ரோகித் ஷர்மா(கேப்டன்), மயாங்க் அகர்வால்,  பிரியங்க் பாஞ்ச்சால், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா,  ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்),  முகமது ஷமி,  முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சவுரவ் குமார்.

டி20 அணி: ரோகித் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட்,  இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா,  ஜஸ்பிரித் பும்ரா,  புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல்  படேல்,  முகமது சிராஜ்,  சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, யஜ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், ஆவேஷ்கான்.

Tags : Sri Lanka ,Rohit ,Indian , Test series with Sri Lanka .. India To the team Rohit Captain
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...