திருச்சுழி மாரியம்மன் கோயில் திருவிழா: பொங்கலிட்டு பெண்கள் நேர்த்திக்கடன்

திருச்சுழி: திருச்சுழி மாரியம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். திருச்சுழியில் உள்ள உள்ள ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்து அம்மன் காலையும், இரவும் மயில், அன்னம், சிங்கம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான நேற்று அம்மனுக்கு பொங்கல் விழா நடைபெற்றது விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அக்னிசட்டி எடுத்தும் அழகு குத்தியும் பொங்கலிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும்,தொழில்துறை அமைச்சருமான தங்கம்தென்னரசு  பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தார். அமைச்சருக்கு கோவில் நிர்வாக செயலர் புவனேஸ்வரன் மற்றும் மாரியம்மன் விளையாட்டு மன்ற உறுப்பினர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்றனர்.

பின் கிராம பொதுமக்கள் மற்றும் மாரியம்மன் விளையாட்டு மன்ற உறுப்பினர்கள் அமைச்சரிடம் கோயில் வளாகத்தின் முன்புறம் மற்றும் வடக்கு பகுதியில் விழாக்காலங்களில் தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்கவும்.  வெயில் மற்றும் மழை போன்ற இயற்க்கை பேரிடரில் இருந்து பக்தர்களை காக்க நிரந்தர மேற்கூரை அமைத்தும் பேவர்பிளாக் கல் பதித்து தருமாறு கோரிக்கை வைத்தனர். இதனை கேட்ட அமைச்சர் தங்கம்தென்னரசு, விரைவில் கிராம பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக அவர் உறுதியளித்தார்.

இவ்விழாவில் திருச்சுழி ஒன்றிய பெருந்தலைவர் பொன்னுத்தம்பி, வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தனபாண்டி, திருச்சுழி நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். 

Related Stories: