×

ஆப்கானில் சோகம்: ஆழ்துளை கிணற்றில் சிக்கி 6 வயது சிறுவன் பரிதாப சாவு

காபூல்: ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தின் ஷோகாக் கிராமத்தில் சமீபத்தில் ஒரு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. இது, மூடப்படாமல் அப்படியே இருந்தது. கடந்த 15ம் தேதி இந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான். 25 மீட்டர் ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 10 மீட்டர் ஆழத்தில் சிறுவன் சிக்கி போராடினான். அக்கம்பக்கத்தினர், கயிறு கட்டி சிறுவனை மீட்க முயன்றனர். பலனளிக்கவில்லை.

இதையடுத்து ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனாலும் மீட்பு குழுவினரால் சிறுவனை நெருங்க முடியவில்லை. அதே நேரத்தில் சிறுவன் சுயநினைவுடன் இருக்கிறானா என்பதை உறுதி செய்ய, அவனது தந்தை பேச்சு கொடுத்தவாறு இருந்தார். சிறுவனும் தந்தையுடன் பேசி வந்தான். ஆனால் நேற்று முன்தினம் காலை முதல் சிறுவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்நிலையில் 4 நாள் போராட்டத்துக்கு பின் நேற்று ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டான்.

சிறுவனை காபூலில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்டதும், அவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மீட்பு குழுவினரின் 4 நாள் போராட்டம் தோல்வியில் முடிந்தது. உடலை பார்த்ததும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.




Tags : Afghan , Tragedy in Afghanistan: The tragic death of a 6-year-old boy trapped in a deep well
× RELATED தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில்...