புவனேஸ்வரின் அனுபவம் வெற்றியை தேடித்தந்தது: கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே 2வது டி.20 போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் எடுத்தது. ரிஷப் பன்ட் நாட்அவுட்டாக 52 (28 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), விராட் கோஹ்லி 52 (41 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), வெங்கடேஷ் அய்யர் 33 (18பந்து), கேப்டன் ரோகித்சர்மா 19 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 187 ரன் இலக்கை துரத்திய வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 3விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களே எடுத்தது. இதனால் 8 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணியினர் பல கேட்ச்களை கோட்டைவிட்டாலும் கடைசி நேரத்தில் நேர்த்தியான பந்துவீச்சால் வெற்றிபெற முடிந்தது. ரோவ்மேன் பவல் ஆட்டம் இழக்காமல் 68 (36 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), பூரன் 62 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில், புவனேஸ்வர்குமார், சாஹல், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ரிஷப் பன்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். முதல் போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.

கடைசி போட்டி நாளை நடக்கிறது. வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் ரோகித்சர்மா அளித்த பேட்டி: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாடும்போது எப்போதும் பயம் இருக்கும். ஆனால் இன்று இறுதியில் அது ஒரு அற்புதமான முடிவாக இருந்தது. நாங்கள் எங்கள் திட்டங்களை அழுத்தத்தின் கீழ் செயல்படுத்தியதில் நான் பெருமைப்படுகிறேன். புவனேஸ்வர் பந்து வீசும்போது அது மிகவும் நெருக்கடியானது. அங்குதான் அனுபவம் வருகிறது. புவி பல வருடங்களாக அதை செய்து வருகிறார். நாங்கள் அவரை மிகவும் நம்புகிறோம். விராட் பேட்டிங்கில் தொடங்கிய விதம் எனது அழுத்தத்தை குறைத்தது.

அது மிக முக்கியமான இன்னிங்ஸ். ரிஷப் மற்றும் வெங்கடேஷ் கடைசியில் சிறப்பாக பேட்டிங் செய்தனர். வெங்கடேஷிடம் அந்த மாதிரியான முதிர்ச்சியைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கேட்சுகளை எடுத்திருந்தால் ஆட்டம் வேறுவிதமாக இருந்திருக்கும். அந்தத் தவறுகளைக் குறைத்து முன்னேற முயற்சிப்போம், என்றார். வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், ``பவல் இன்று அபாரமாக பேட்டிங் செய்தார். பூரனுடனான அவரது பார்ட்னர்ஷிப் எங்களை ஏறக்குறைய வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றது. அந்த 8 ரன்களை எப்படி எடுத்திருக்க முடியும் என்பதை நாம் வெவ்வேறு வழிகளில் பார்க்கலாம். சேஸ் சிறப்பாக பந்து வீசினார். இன்று மிக நல்ல ஆட்டமாக இருந்தது.

முந்தைய ஆட்டங்களில் இருந்து எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டோம்’’ என்றார். புவனேஸ்வர்குமார் கூறுகையில், ``நான் என்னையே நம்பினேன். 19வது ஓவரை வீச வந்தபோது ரோகித் என்னிடம் 9-10 ரன் கொடுத்தால் அது அவர்களுக்கு கடினமாக இருக்கும் என்று கூறினார், அதனால் நான் யார்க்கர்களை முயற்சித்தேன். கொஞ்சம் பனி இருந்தது, ஆனால் நாங்கள் சமாளித்தோம். பனியுடன் யார்க்கர்களை வீசுவது எப்போதுமே கடினமானது. அநேகமாக 200 கி.மீ. வேகத்தில் பவல் அடித்துக்கொண்டிருந்ததால் ஒரு சில மெதுவான பந்துகளை முயற்சித்தோம், என்றார்.

Related Stories: