×

அதிமுக ஆட்சிக்காலத்தில் உயர்மின்கோபுர விளக்கு அமைத்ததில் முறைகேடு 3 பிடிஓக்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் விஜிலென்ஸ் போலீஸ் அதிரடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கின

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலக்கட்டத்தில், முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், 3 பிடிஓக்களின் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை, அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியின் மூலம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, முறைகேடுகள் செய்ததாக புகார் எழுந்தது. இதன்பேரில், அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, உயர் மின்கோபுர எல்இடி விளக்கு அமைக்கும் பணியில், சந்தை விலையைவிட கூடுதல் விலை நிர்ணயம் செய்து, அரசுக்கு ₹1 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டியில் பிடிஓக்களாக பணியாற்றிய ஆனந்தன், மதலைமுத்து, ஜெயராமன் மற்றும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த மதிவாணன், பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருளப்பட்டியைச் சேர்ந்த குமார் ஆகிய 5 பேர் மீது, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.இந்த விசாரணையில் 2016ம் ஆண்டு பிடிஓவாக பணியாற்றிய ஆனந்தன்(58), 2017-2018ம் ஆண்டில் பிடிஓவாக பணியாற்றிய மதலைமுத்து(58), 2019ம் ஆண்டு பிடிஓவாக பணியில் இருந்த ஜெயராமன்(58) ஆகியோர், தங்களது பணிக்காலத்தில் முறைகேடு செய்தது தெரியவந்தது. அரூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த ஆனந்தன், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட இயக்குனருக்கு நேர்முக உதவியாளராக பணியாற்றுகிறார். மதலைமுத்து, தற்போது மொரப்பூரிலும், ஜெயராமன், ஏரியூரிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 7.15 மணிக்கு, ஒரே நேரத்தில் 3 பேர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மொரப்பூர் பிடிஓ மதலைமுத்துவின் தர்மபுரி கலெக்ட்ரேட் ராமன் நகர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி(பொ) ஜெயக்குமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனையிட்டனர். மாலை வரை நீடித்த இந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே போல், ஜெயராமனின் ஏ.பள்ளிப்பட்டி வீட்டிலும், கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குனரின் நேர்முக உதவியாளரான ஆனந்தனின் அரூர் குறிஞ்சிநகர் வீட்டிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ‘‘பாப்பிரெட்டிப்பட்டி பிடிஓ அலுவலகத்தில் 2016ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரை, உயர் மின்கோபுர எல்இடி விளக்கு அமைத்ததில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, சுழற்சி முறையில் பணியாற்றிய ஆனந்தன், மதலைமுத்து, ஜெயராமன் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. முக்கிய ஆவணங்கள் மற்றும் விசாரணைக்காக டாக்குமெண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,’’ என்றனர்.




Tags : AIADMK , Abuse of high tower lighting during AIADMK rule 3 BDOs simultaneously in homes Vigilance Police Action Raid: Important documents seized
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...