×

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை: உயர் நீதிமன்ற அமர்வு இடைக்கால தீர்ப்பு

சென்னை: இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரண்டு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது. ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ நிறுவனம், அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள்  மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா  சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமத், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனத்துக்கு உரிமை உள்ளது என்று 2019 தீர்ப்பளித்திருந்தார்.  தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து இளையராஜா, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் மனுதாரரின் பாடல்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு உரிய காப்புரிமை பெறவில்லை.   தனி நீதிபதி சட்டத்தின் பிரிவு 14ல் ‘‘பதிப்புரிமை” என்பதன் பொருளைப் பரிசீலிக்க தவறிவிட்டார். இசைப் பணியைப் பொறுத்தவரை,  பதிப்புரிமை என்பது”எந்தவொரு ஊடகத்திலும் மின்னணு வழிகளில் சேமித்து வைப்பது உட்பட எந்தவொரு பொருளின் வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு” பிரத்யேக உரிமையாகும் என்று குறிப்பிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில்   சம்பந்தப்பட்ட இசை நிறுவனம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 


Tags : Ilayaraja , To use Ilayaraja's songs Permission for music companies Prohibition of order by a separate judge: Interim Judgment of the High Court Session
× RELATED ஆமாம், நான் எல்லோருக்கும்...