ஆழ்வார்பேட்டை தனியார் கலைக்கூட ரகசிய அறையில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நடராஜர், கிருஷ்ணர் சிலை, 11 பேழைகள் பறிமுதல்: எந்த கோயிலில் திருடப்பட்டது என கண்டறிய தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கலைக்கூடத்தில் ரகசிய அறையில் பதுக்கி வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள 11 பேழைகள் உட்பட நடராஜர், கிருஷ்ணர் சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே நெடுஞ்சாலையில் ‘காட்டேஜ் ஆர்ட்ஸ் எம்போரியம்’ என்ற பெயரில் தனியார் கலைக்கூடம் உள்ளது. இந்த கலைக்கூடத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான பொருட்கள் மற்றும் சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பி அசோக் நடராஜன் தலைமையில் டிஎஸ்பி முத்துராஜன், இன்ஸ்பெக்டா் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் தனியார் கலைக்கூடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில், அந்த கலைக்கூடத்தின் ரகசிய அறையில் இருந்து பல கோடி மதிப்புள்ள 2 அடி உயரம் உள்ள நடராஜர் உலோக சிலை, 1 அடி உயரம் உள்ள சிறிய நடராஜர் உலோக சிலை, 1 அடி உயரம் உள்ள கிருஷ்ணர் உலோக சிலை மற்றும் பவுத்தம் மத மந்திரங்கள் அடங்கிய வேற்று மொழி கையெழுத்து பிரதிகள்  அடங்கிய 11 பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டது.கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும் பேழைகளுக்கான ஆதாரங்களை கேட்ட போது தனியார் கலைக்கூடத்தின் சார்பில் அளிக்கப்படவில்லை. அதைதொடர்ந்து 4 சிலைகள் மற்றும் 11 பேழைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.  

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் பேழைகள் பல நூற்றாண்டுகள் பழமையானதால் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது. யார் மூலம் இந்த கலைக்கூடத்திற்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், சிலைகள் மற்றும் பேழைகள் குறித்து ஆய்வு செய்ய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் எந்தவித உரிய ஆவணங்கள் இன்றி ரகசிய அறையில் 4 உலோக சிலைகள், 11 பேழைகள் வைத்திருந்த தனியார் கலைக்கூடத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: