×

சம்பா பருவம் முடிந்த நிலையிலும் கோமுகி அணையில் 41 அடி தண்ணீர் இருப்பு

சின்னசேலம் : சம்பா பருவம் முடிந்த நிலையிலும் கச்சிராயபாளையம் கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியாக இருப்பு உள்ளது.கல்வராயன்மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணை சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடிவரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதில் ஆற்றுப் பாசனத்தின்மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின்மூலம் 5,000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. அதாவது, இந்த கோமுகி அணையின்மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்ததால் தற்போது சம்பா பருவம் முடிந்த நிலையிலும் 46 அடியாக இருந்த கோமுகி அணையின் நீர்மட்டம் தற்போது 41 அடி நீர் இருப்பு உள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஜனவரி மாதத்திலேயே அணையில் நீர் வடிந்துவிடும் நிலை இருந்தது.

அதனால் தற்போது விவசாயிகள் அணையில் உள்ள தண்ணீரை கொண்டு குறுகிய கால நெற்பயிர், உளுந்து போன்ற பயிர்களை சாகுபடி செய்தால் தண்ணீர் போதுமானதாக இருக்கும் என வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் கோமுகி அணையில் தண்ணீர் வடியாமல் இருப்பதால் கச்சிராயபாளையம் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் குடிநீர் பஞ்சமும் ஏற்படாது என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Tags : Samba ,Komukhi dam , Chinnasalem: The water level of Kachirayapalayam Gomuki Dam is 41 feet even after the end of the samba season.
× RELATED ஆதீனத்தை மிரட்டிய வழக்கு: பாஜ நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்