×

குமரியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம்-இனிப்புகள் வழங்கி குழந்தைகளை வரவேற்ற ஆசிரியர்கள்

நாகர்கோவில், : குமரி மாவட்டத்தில் நர்சரி பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெற தொடங்கியுள்ளன.தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலில் 2வது அலை கடந்த ஆண்டு கடுமையாகத் தாக்கியது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. மாணவ மாணவியருக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்றன. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆனால் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, கொரோனா மூன்றாவது அலை தாக்கம் குறைந்ததற்கு பிறகு கடந்த 1ம் தேதி முதல், 1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா நிலவரம் மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை அடுத்து, பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை வரும் மார்ச் மாதம் 2 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 16ம் தேதி முதல், நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் குமரி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் உள்ளூர் விடுமுறை என்பதால் நேற்று முதல் 250க்கும் மேற்பட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவ மாணவியர் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு வருகை தந்தனர்.

அவர்களை ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கியும், பூச்செண்டுகள் அளித்தும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முதல் முதலாக வகுப்புகளுக்கு வந்த குழந்தைகள் அழுதவாறே அமர்ந்திருந்தனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.

பெரும்பாலான மழலையர்களை அவர்களது பெற்றோரே அழைத்து வந்தனர். அரசு பள்ளிகளையொட்டி செயல்படும் அங்கன்வாடிகளில் இருந்து வந்த குழந்தைகள் இயல்பாக வகுப்பறைகளில் அமர்ந்திருந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பள்ளி வளாகத்தின் அருகேயே பெற்றோர் காத்திருந்து குழந்தைகளை திரும்ப அழைத்து சென்றனர்.

Tags : LKG ,UKG ,Kumari , Nagercoil: Nursery schools in Kumari district were reopened yesterday and LGG and UKG classes have started taking place.
× RELATED பாளையங்கோட்டை தனியார் பள்ளியில்...