×

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கன்டெய்னர் ஏற்றுமதி முனையம் அமைக்கும் பணிகள்-சென்னை கோட்ட உதவி மேலாளர் ஆய்வு

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கன்டெய்னர் ஏற்றுமதி முனையம் அமைக்க பல்வேறு திட்டப் பணிகளை சென்னை மண்டல உதவி கோட்ட மேலாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தமிழகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் பல்வேறு மாநிலங்களை கடக்கும் மிக முக்கிய ஒரு ரயில் நிலையமாக விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ரயில் நிலையத்தில் கன்டெய்னர் தொழில் மையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கன்டெய்னர் ஏற்றுமதி முனையம் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அதற்கான டெண்டர் விடப்பட்டு முனையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இங்கு நடைபெற்றுவரும் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்ள சென்னை மண்டல உதவி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் நேற்று சென்னையிலிருந்து தனி ரயில் மூலம் மதியம் 12.50 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தார். அப்போது அனைத்து பிரிவு துறை அதிகாரிகளும் அவருடன் இணைந்து ரயில்வே கூட்ஸ் ஷெட் அருகே கன்டெய்னர் ஏற்றுமதி முனையம் அமைப்பதற்கான பாதைகள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, துறை அதிகாரிகளுடன் பரப்பளவு குறித்தும், நீள அளவுகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வு குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இங்கிருந்து 100 கன்டெய்னர் லாரிகள் மூலம் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்து சென்னைக்கு கொண்டு செல்லும் போது பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல், விபத்து, காற்று மாசுபாடு, டீசல் செலவு போன்றவை ஏற்படுகிறது. இதனால் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் ஒரே நேரத்தில் அதிகளவில் கன்டெய்னர்களை ஏற்றிச் சென்று இறக்க முடியும். இதனால் ரயில்வே துறைக்கு வருவாயும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கும். இதனால் இங்கு கன்டெய்னர் ஏற்றுமதி முனையும் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது’ என்றார்.

இதனையடுத்து, உதவி கோட்ட மேலாளர் சுப்பிரமணியம் ரயில் நிலையத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்டு ரயில் நிலையம் தூய்மையாக பராமரிக்க படுகிறதா என்பது குறித்தும், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில்வே துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.
பின்னர், மாலை 3.30 மணிக்கு தனி ரயில் மூலம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டு சென்றார்.



Tags : Jolarpettai Railway Station ,Chennai , Jolarpettai: Various projects are underway to set up a container export terminal at Jolarpettai railway station in Chennai.
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...