×

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த இடைக்கால தடை!: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த பாடல்களை அவர் கூறப்பட்ட ஒப்பந்தத்தை மீறி 4 இசை நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த 2010ம் ஆண்டு விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த், இளையராஜா பாடல்களை அகி மியூசிக், எக்கோ, யுனிசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்தலாம் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவால் தான் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்துவது ஒளிப்பதிவு சட்டப்படி தவறு.

இது தனக்கு பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மேல்முறையீட்டு வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கருதி இளையராஜாவின் பாடல்களை எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்கள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தனர். மேலும் எக்கோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் இசை நிறுவனங்கள் பதில் தர உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : Ilayaraja ,Aki Music , Ilayaraja, song, Aki music, ban, iCord
× RELATED “இசையையும், பாடலையும்...