ஆவடி டேங்க் ஃபேக்ட்ரியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: பொறியாளர் உட்பட 4 பேரை கைது செய்த போலீஸ்

சென்னை: ஆவடியில் வேலைவாகி தருவதாக கூறி 130 பேரிடம் ரூ.50 லட்சம் பண மோசடி செய்த இன்ஜினியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி டேங்க் ஃபேக்ட்ரியில்( Heavy Vehicle Factory) வேலை வாங்கித் தருவதாக கூறி 130 நபர்களிடம் தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்த 4 பட்டதாரி நபர்களை ஆவடி டேங்க் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆவடி டேங்க் ஃபேக்ட்ரியில் உள்ள பிரதான சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஒன்றில், கடந்த 14 ஆம் தேதி அங்கு வந்த வாலிபர் ஒருவர் தன்னை ஆவடி டேங்கின் இணைபொது மேலாளர் என கூறியுள்ளார்.

பின்பு, அந்த நபர் அவரின் ஐ.டி கார்டு மற்றும் அலுவலக சீல் முத்திரை ஆகியவற்றை கொண்டு வங்கியில் பணம் செலுத்த வந்திருந்தார். இவரின் நடத்தையில் சந்தேகமடைந்த பேங்க் அதிகாரி, உடனடியாக ஆவடி டேங்க் ஃபேக்ட்ரியின் மேலாளர் பாலசுப்பிரமணியத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனை அறிந்த மேலாளர் பாலசுப்பிரமணியம் விரைந்து வங்கி சென்றுள்ளார். அங்கிருந்த நபரை அழைத்து விசாரணை மேற்கொண்ட பொழுது, அந்த நபர் வைத்திருந்த ஐ.டி கார்டு, சீல் முத்திரைகள் என அனைத்துமே போலி என கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அதிகாரிகள் அந்த நபரை பிடித்து ஆவடி டேங்க் ஃபேக்ட்ரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மேலாளர் பாலசுப்பிரமணி காவல்நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்தார். இதை தொடர்ந்து, ஆவடி போலீசார், உதவிக்கு கமிஷ்னர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்ட்டர் ராஜ் தலைமையில் வழக்குப்பதிவு செய்து 2 நாட்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வாலிபர் சென்னையை அடுத்த மாங்காட்டில் கோவிந்தராஜ் நகரை சேர்ந்த ஸ்ரீராம் என்பதும், இவர் பி.டெக் பட்டதாரி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இவரிடமிருந்து ஆவடி டேங்க் ஃபேக்ட்ரியின் போலியான ஐ.டி கார்டு, சீல் முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ஆவடி டேங்க் ஃபேக்ட்ரி, யூனியன் ஒர்க்ஸ் மேனேஜர், அசிஸ்டென்ட் ஒர்க்ஸ் மேனேஜர், ஜாய்ன் ஜெனரல் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளுக்கு முறையாக ரூ.25,000,ரூ.50,000,ரூ.1 லட்சம் என தனித்தனியாக பேரம் பேசி சுமார் 130-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களை ஏமாற்றி, போலியான பணிநியமன ஆணையை தயார் செய்து வழங்கியுள்ளனர். ஆவடி டேங்க் ஃபேக்ட்ரியின் போலியான சீல் முத்திரையை  தயார் செய்து அவர்களிடம் கையெழுத்தும் வாங்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் ஸ்ரீராம் உட்பட செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா தபால்மேடு கிராமத்தைச் சேர்ந்த இன்ஜினியர் தினேஷ்குமார், செங்கல்பட்டு பெரியமலையலூர் என்கிற மாதாகோவில் நகரை சேர்ந்த முதுநிலை பட்டதாரி கிறிஸ்டோபர், சென்னை அழகாபுத்தூர் கலைவாணர் தெருவை சேர்ந்த விளையாட்டு பயிற்சியாளர் கார்த்தி என 4 பேரும் உடந்தையாக இருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.               

Related Stories: