×

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கு : 38 பேருக்கு தூக்கு தண்டனை; 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!!

அகமதாபாத்: கடந்த 2008ல் நடந்த அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் நகரில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 21 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 56 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 77 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.படேல், கடந்த 8ம் தேதி தீர்ப்பளித்தார். அதில், 49 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. 28 பேர் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விசாரணை நடந்தது. இதில் இரு தரப்பு விசாரணைகளும் முடிந்தன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், நீதிபதி ஏ.ஆர்.படேல்,அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும் எஞ்சிய 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்

Tags : Ahmedabad , Ahmedabad, blasts, criminals, death penalty, life sentence
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...