×

18 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் 50% இலக்கையே அடைந்துள்ளோம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தகவல்

நாகர்கோவில்: வாக்காளர் பட்டியலில் 18 வயதானவர்களை சேர்ப்பதில் 50 சதவீத இலக்கைதான் அடைந்துள்ளோம் என்று நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ‘‘எனது வாக்கு எனது எதிர்காலம்- ஒரு வாக்கின் வலிமை’’ என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார்.

குமரி மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் முன்னிலையில் நடந்த  நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலர் சத்யபிரதா சாகு கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் 50 சதவீதம் இலக்கைதான் அடைந்துள்ளோம். இதனை 100 சதவீதமாக மாற்றும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆண்டுக்கு 2 மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முந்தைய காலக்கட்டங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர் அடையாள அட்டையை வழங்கி வந்தனர். தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த உடன் ஒரு மாதத்தில் அடையாள அட்டை கிடைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுவதும் ஸ்பீடு போஸ்ட் மூலம் 32 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கியுள்ளதை, அகில இந்திய தேர்தல் ஆணையம் வெகுவாக பாராட்டியுள்ளது. மேலும் இதனை நாடு முழுவதும் அமல்படுத்த இருப்பதாக தெரிவித்தது. நமது நாட்டில்தான் செல்போன், கம்ப்யூட்டர் வாயிலாக பதிவு செய்து எளிதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து அடையாள அட்டையும் பெற்றுக்கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ராணுவ ஆட்சி நடந்திருக்கிறது.

ஆனால் நமது இந்திய நாட்டில்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சி நடைபெற்று வருகிறது. எனவே 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வாக்களிப்பது நமது கடமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு குறித்த 3 நிமிட குறும்படத்தையும் தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு பார்வையிட்டார்.

Tags : Chief Electoral Officer ,Satyaprada Saku , We have achieved 50% of the target of enrolling people above 18 years of age: Chief Electoral Officer Satyaprada Saku
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...