×

முதல்வர் வீட்டின் அருகே போராட்டம் நடத்திய விவகாரம் போலி பெயர் கொடுத்த மாணவ அமைப்பினர் 12 பேர் ஆதார் அட்டையை தாக்கல் செய்ய வேண்டும்: எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவு

சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக பாஜ மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் நிதி திரிபாதி தலைமையில் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், அரி கிருஷ்ணா உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் கடந்த 14ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டின் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பின் பொதுச்  செயலாளர் நிதி திரிபாதி, நிர்வாகிகளான முத்துராமலிங்கம், அரிகிருஷ்ணா உட்பட 32 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இவர்கள் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனுக்கள் தலைமை பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் கோதண்டராஜ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. , போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘மனுதாரர்களில் 12 பேர் தங்கள் பெயர்களையும், முகவரிகளையும் போலீசாரிடம் முதலில் போலியாக தந்துள்ளனர்அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டபோது உண்மையான பெயர்களை தந்துள்ளனர். எந்த பெயர் சரியானது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு கால அவகாசம் வேண்டும்.எனவே  ஜாமீன் வழங்க கூடாது என்றார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பால் கனகராஜ், கைது செய்யப்பட்டவர்களில் 12 பேர் கல்லூரி மாணவர்கள். தற்போது தேர்வு நடைபெறுவதால் அவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. அவர்களின் பெற்றோர்கள் போலீசாரிடம் அவர்களின் ஆதார் அட்டைகளை கொடுத்துள்ளனர். பிரதமரின் கவனத்தை ஈர்க்கவே போராட்டம் நடத்தினர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் 2 தேர்வுகளை எழுதாமல் இருக்கிறார்கள் என்று வாதிட்டார்.
இதைக்கேட்ட தலைமை பெருநகர மாஜிஸ்திரேட், நாளை (இன்று) 2.30 மணிக்கு விசாரணையை தள்ளிவைக்கிறேன். அப்போது, மனுதாரர்கள் தங்களின் ஆதார் அட்டைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

* எல்லாமே போலி முகவரி
தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக முதல்வர் வீட்டின் அருகே முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் 4 பிரிவின் கீழ் கைது செய்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்களிடம் பெயர் மற்றும் முகவரிகளை தேனாம்பேட்டை போலீசார் பெற்றனர். அதைதொடர்ந்து கைதான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த நபர்களின் பெயர் மற்றும் முகவரி குறித்து போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். அதில் சிறையில் அடைக்கப்பட்ட நபர்களில் 12 பேர் தங்களது பெயர் மற்றும் முகவரியை போலியாக கொடுத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 12 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் ஐபிசி 464, 465, 468, 471 மற்றும் 420 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து மோசடியாக போலியான பெயர் மற்றும் முகவரி கொடுத்த 12 பேரையும் போலீசார் மீண்டும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Chief Minister ,Egmore ,Metropolitan ,Magistrate , Egmore Chief Metropolitan Magistrate orders 12 students to file Aadhar cards
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...