×

லீ மெரிடியன் ஓட்டலை எம்ஜிஎம் ஹெல்த்கேர் கையகப்படுத்தும் திட்டம் ரத்து

சென்னை: தொழிலதிபர் பழனி பெரியசாமிக்கு சொந்தமான அப்பு ஓட்டல்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை மற்றும் கோவையில் லீ மெரிடியன் ஓட்டல்கள் நடத்தப்படுகிறது. இந்நிறுவனம், இந்திய சுற்றுலாக் கழகத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.18 கோடியை செலுத்த கால அவகாசம் வழங்கியும் செலுத்தாததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 3 நிறுவனங்கள் அப்பு ஓட்டல் நிறுவனத்தை வாங்க முன்வந்த நிலையில், சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் குழுமத் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் சமர்ப்பித்த ரூ.423 கோடி மதிப்பிலான ஓட்டலை கையகப்படுத்தும் திட்டத்திற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை கிளை ஒப்புதல் அளித்தது.

இதை எதிர்த்து அப்பு ஓட்டல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பழனி பெரியசாமி தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்தை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் ரூ.423 கோடிக்கு ஏலத்தில் எடுப்பது நியாயமில்லை என கூறப்பட்டிருந்தது.மேலும் கடன் வழங்கியவர்களுக்கு பணத்தை செலுத்த தயாராக உள்ளதாகவும், ரூ.450 கோடியை டெபாசிட் செய்ய தயாராக இருப்பதாகவும்,  அவகாசம் வேண்டும் என்றும் பழனி பெரியசாமி கோரியிருந்தார். இந்நிலையில், லீ மெரிடியன் ஓட்டலை எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு விற்க தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணை, மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினர்கள் வேணுகோபால்,வி.பி.சிங் அமர்வில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது, தொழிலதிபர் பழனி பெரியசாமி தரப்பு வாதத்தை, சரி என்று ஏற்றுக் கொண்ட தீர்ப்பாயம், அப்பு ஓட்டல்ஸ் நிறுவனத்தின் லீ மெரிடியன் ஹோட்டலை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் வாங்கும் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் கடனை திருப்பி செலுத்த தொழிலதிபர் பழனி பெரியசாமிக்கு, அளித்த திட்டத்தை வங்கிகளின் கடன் குழுமம் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.




Tags : MGM Healthcare ,Le Meridien Hotel , Le Meridien Hotel MGM Healthcare acquisition plan canceled
× RELATED சென்னை லீ மெரிடியன் ஓட்டல் வழக்கு:...