×

8ம் வகுப்பு படித்தவர் 8 ஆண்டாக கோர்ட்டில் வக்கீலாக ஆஜர்: நாமக்கல்லில் வசமாக சிக்கிய ஆசாமி

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் பஞ்சமி நில பிரச்னையில் பெண்ணுக்காக நீதிமன்றத்தில் ஆஜரான, போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். 8ம் வகுப்பு படித்துவிட்டு 8 ஆண்டுகளாக வக்கீலாக நீதிமன்றத்தில் ஆஜரான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த கோவிந்தம்பாளையத்தை சேர்ந்தவர் அலமேலு. அரசு வழங்கிய 2 சென்ட் பஞ்சமி நிலம் தொடர்பாக இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக நாமக்கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில், அலமேலு புகார் கொடுத்தார். இந்த புகார் விசாரணையில் இருந்து வந்தது. ஆனால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதனால் தனது புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி, குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அலமேலு மனு தாக்கல் செய்தார். அலமேலுவின் தரப்பில் குமாரபாளையம் சானார்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (எ) கோகுலகண்ணன்(40) வழக்கறிஞராக ஆஜரானார். தனது கட்சிக்காரர் காவல்துறையில் கொடுத்துள்ள புகார் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிடும்படி, மாரிமுத்து செய்திருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் ஆஜராக, மாரிமுத்து குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் ஏராளமான பிழைகள் காணப்பட்டதால், எதிர்தரப்பை சேர்ந்த வழக்கறிஞர், மாரிமுத்து வழக்கறிஞராக இருப்பதற்கான சாத்தியகூறு இல்லை என மாஜிஸ்திரேட்டிடம் புகார் செய்தார். இதையடுத்து மாரிமுத்துவின் வழக்கறிஞர் பதிவெண் சரிபார்க்கப்பட்டது. அவர் கொடுத்திருந்த பதிவெண் நெல்லையை சேர்ந்த ஒரு வழக்கறிஞரின் பெயரில் இருந்தது தெரியவந்தது. மேலும், கோகுலகண்ணன் என்ற பெயரில், தமிழ்நாட்டில் ஒரே ஒரு வழக்கறிஞர் மட்டுமே பார் கவுன்சிலில் பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது. மாரிமுத்து (எ) கோகுல கண்ணன் வக்கீலுக்கு படித்து, பார் கவுன்சிலில் பதிவு செய்ததற்கான எந்த ஆவணங்களும் இல்லை. தவிர, பவானியை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவரிடம் அவர் பயிற்சி பெற்றதாக கூறியதிலும், உண்மை இல்லை என தெரியவந்தது.

இதுகுறித்து குமாரபாளையம் வழக்கறிஞர் சங்க செயலாளர் சிவசுப்பிரமணியம், குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், மாரிமுத்து மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் மாரிமுத்து கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி எனவும், 8ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளியில் படித்துள்ளதும் தெரியவந்தது. நண்பர்களுடன் வெளியில் தங்கியுள்ள மாரிமுத்து, கடந்த 8 ஆண்டுகளாக திருச்செங்கோடு, குமாரபாளையம் கோர்ட்டில் தன்னை வழக்கறிஞர் எனக்கூறி வழக்குகளில் ஆஜராகி, மக்களை ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குமாரபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Azhar , 8th class, 8 years, in court, lawyer, Azar
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...