சிட்னியில் பயங்கரம்: கடற்கரையில் நீந்தியவரை கடித்து இழுத்து சென்ற சுறா; உடலில் சில பாகமும், ஆடையுமே கிடைத்ததாக தகவல்

சிட்னி: ஆஸ்திரேலிய கடற்கரை ஒன்றில் சுற்றுலாப்பயணிகள் உட்பட ஏராளம் பேர் கூடியிருக்க, அவர்கள் கண் முன்னே கடலில் நீந்திக்கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் ஒன்று கடித்துத் துண்டாக்கி கடலுக்கு அடியில் இழுத்துச் சென்ற பயங்கரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் இருந்து 20 கி.மீ தொலைவில் லிட்டில் பே கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஒருவரை பெரிய சுறா மீன் ஒன்று தாக்கியது. இதில் அந்த நபர் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய  வைத்துள்ளது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினருக்கு, அவரது உடலில் சில பாகங்களும், ஆடையும்  மட்டுமே கிடைத்தது. சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் சிட்னி கடற்கரையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் திகிலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு, சிட்னி கடற்கரையில் நுழைய பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுறா மீன் தாக்குதல் நடத்திய இடத்தைச் சுற்றி அபாயப் பகுதி என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நியூசவுத் வேல்ஸ் முதன்மை தொழில்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்ததில், அந்த நபரை தாக்கியது 9.8 அடி நீளமுள்ள வெள்ளை நிற சுறாவாக இருக்கலாம் என்று சுறா உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 1963-ம் ஆண்டுக்கு பிறகு சிட்னியில் நடந்த முதல் அபாயகரமான சுறா தாக்குதல் இதுவாகும். கோடைக் காலத்தில் மக்கள் கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். சுறா மீன் இருப்பது குறித்து அதிகாரிகள் ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

Related Stories: